சுடுகாடு வசதி செய்து தரப்படாததால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு

சுடுகாடு வசதி செய்து தரப்படாததால் தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.
சுடுகாடு வசதி செய்து தரப்படாததால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு
Published on

கல்லக்குடி,

திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஒன்றியம், சிறுகளப்பூர் ஊராட்சியில் ஆதிதிராவிடர் காலனியில் 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 50 ஆண்டுகளாக ஊருக்கு தெற்கு பகுதியில் உள்ள சுடுகாட்டை பயன்படுத்தி வருகின்றனர். சுடுகாடு செல்லும் வழியின் குறுக்கே நந்தி ஆறு உள்ளது.

மழை காலங்களில் இந்த ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். அந்த சமயத்தில் ஆதிதிராவிடர் பகுதியில் இறப்பு சம்பவம் ஏற்பட்டால் பிரேதத்தை சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல முடியாத நிலை நீடித்து வருகிறது. தண்ணீரில் இறங்கி, இறந்தவர் பிணத்துடன் மிகவும் கஷ்டப்பட்டே ஆற்றை கடந்து அடக்கம் செய்து வந்தனர். ஆகவே, நந்தி ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் அல்லது ஆற்றுக்கு முன் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் சுடுகாடு அமைத்து தர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் சார்பில் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால், இந்த கோரிக்கை இன்றுவரை நிறைவேற்றப்படாததால் வருகிற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பது என்று கிராம மக்கள் ஒன்று கூடி முடிவு செய்துள்ளனர். தேர்தல் புறக்கணிப்பு தொடர்பான பதாகையை தெருவின் நுழைவு வாயிலில் வைத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் கூறுகையில், நாங்கள் மிகவும் ஏழ்மையானவர்கள், எங்கள் உறவினர்கள் மழைகாலத்தில் இறந்தால் சுடுகாட்டிற்கு கொண்டு செல்வது பெரும் போராட்டமாகும். ஏனெனில், செல்லும் பாதை மண் பாதையாகும். அதோடு ஆற்றில் கழுத்து அளவிற்கு மேல் தண்ணீர் ஓடும்போது பிணத்தை கொண்டு செல்வது மிகவும் சிரமமாக உள்ளது. ஆகவே, எங்கள் கிராமத்தில் உள்ள நந்தி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டித்தர வேண்டும் அல்லது ஆற்றுக்கு முன் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் சுடுகாடு அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், வருகிற தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணிப்போம் என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com