கர்நாடகத்தில் வைரஸ் தொற்று 7 ஆயிரத்தை எட்டியது; கொரோனாவுக்கு ஒரே நாளில் 5 பேர் பலி - மாநிலத்தில் சாவு எண்ணிக்கை 89 ஆக உயர்ந்தது

கர்நாடகத்தில் கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 5 பேர் பலியானார்கள். இதோடு மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 89 ஆக உயர்ந்தது. அதோடு கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை எட்டியது.
கர்நாடகத்தில் வைரஸ் தொற்று 7 ஆயிரத்தை எட்டியது; கொரோனாவுக்கு ஒரே நாளில் 5 பேர் பலி - மாநிலத்தில் சாவு எண்ணிக்கை 89 ஆக உயர்ந்தது
Published on

பெங்களூரு,

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது.

லட்சக்கணக்கானோரின் உயிரையும் கொரோனா பறித்து வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தையும் தாண்டிவிட்டது. அதேபோல் பல நாடுகளில் சாவு எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் உள்ளது. உலகம் முழுவதும் தனது கோரத்தாண்டவத்தை அரங்கேற்றி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. உலக அளவில் இந்தியா கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையில் 4-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்தியாவில் மராட்டிய மாநிலத்தில் கொரோனா வைரசின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. இந்த நிலையில் மராட்டியத்திற்கு அண்டை மாநிலமாக விளங்கும் கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மாநில அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவல் முதலில் குறைவாகவே இருந்தது. ஆனால் தற்போது ஒவ்வொரு நாளும் பாதித்தோரின் எண்ணிக்கையும், வைரஸ் தொற்றால் பலியாவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் மராட்டியம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து கர்நாடகத்திற்கு வந்தவர்கள்தான் என்று கூறப்படுகிறது. அதிலும் மராட்டியத்தில் இருந்து வந்தவர்களால்தான் வைரஸ் தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. மேலும் கடந்த 2 வாரத்தில் மட்டும் சாவு எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இந்த நிலையில் நேற்று கொரோனா வைரசால் 5 பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவில் மட்டுமே 3 பேரின் உயிரை கொரோனா வைரஸ் பறித்திருப்பது அதிர்ச்சி அளிக்கும் விஷயமாகும்.

மேலும் நேற்று ஒரேநாளில் மட்டும் மாநிலத்தில் 176 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன்மூலம் மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை எட்டியது. நாளுக்குநாள் கொரோனா வைரசால் பாதிப்போரின் எண்ணிக்கையும், பலியாவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் மாநில அரசும், மக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

5 பேர் பலி

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 6,740 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று புதிதாக 176 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 6,916 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு இதில் 5 பேர் பலியாகியுள்ளனர்.

அதாவது பெங்களூருவை சேர்ந்த 57 வயது பெண், 50 வயது நபர், 60 வயது மூதாட்டி, தட்சிண கன்னடாவை சேர்ந்த 24 வயது இளைஞர், பீதரை சேர்ந்த 76 வயது முதியவர் ஆகியோர் மரணம் அடைந்துள்ளனர். இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை 89 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றால் பலியானவர்களையும் சேர்த்தால் இதுவரை அந்த வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒட்டுமொத்தமாக 7 ஆயிரமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மாதிரிகள்

பரிசோதனை

மாநிலத்தில் இதுவரை 3,955 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் நேற்று மட்டும் 312 பேர் அடங்குவர். புதிதாக கொரோனா பாதித்தவர்களில் பெங்களூரு நகரில் 42 பேர், யாதகிரியில் 22 பேர், உடுப்பியில் 21 பேர், பீதரில் 20 பேர், கலபுரகியில் 13 பேர், தார்வாரில் 10 பேர், பல்லாரியில் 8 பேர், கோலாரில் 7 பேர், உத்தர கன்னடாவில் 6 பேர், மண்டியா, தட்சிண கன்னடாவில் தலா 5 பேர், பாகல்கோட்டையில் 4 பேர், ராமநகரில் 3 பேர், ராய்ச்சூர், சிவமொக்காவில் தலா 2 பேர், பெலகாவி, ஹாசன், விஜயாப்புரா, பெங்களூரு புறநகர், ஹாவேரியில் தலா ஒருவர் மற்றும் மற்றவர் பிரிவில் ஒருவர் உள்ளனர்.

கர்நாடகத்தில் இதுவரை 4 லட்சத்து 43 ஆயிரத்து 969 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதில் நேற்று மட்டும் 7 ஆயிரத்து 451 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. 35 ஆயிரத்து 946 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

42 பேர் பாதிப்பு

பெங்களூரு நகரில் மட்டும் இதுவரை கொரோனாவுக்கு 33 பேர் பலியாகியுள்ளனர். நகரில் வைரஸ் தொற்றால் 690 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். புதிதாக கொரோனா பாதித்தவர்களில் அதிகபட்சமாக பெங்களூருவில் 42 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஊரடங்கு தளர்த்தப்பட்டு வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் இப்படி அனைத்தும் செயல்பட தொடங்கி உள்ள நிலையில் பெங்களூருவில் கொரோனா மெல்ல அதிகரித்து வருவது மக்களுக்கு அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com