டி.என்.பாளையம்,
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள டி.என்.பாளையம் ஒன்றியத்திற்கு உள்பட்ட பெருமுகை கிராம ஊராட்சிக்கு கடந்த 27-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த ஊராட்சியில் மொத்தம் 7 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் 5 ஆயிரத்து 116 வாக்குகள் மட்டும் பதிவானது.
இது(தனி) ஊராட்சியாக ஒதுக்கப்பட்டுள்ளது. தலைவர் பதவிக்கு அடசப்பாளையம் கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் உள்பட 10 பேர் போட்டியிட்டனர். அதில் பிரகாஷ் என்பவர் கண்கண்ணாடி சின்னத்தில் போட்டியிட்டு ஆயிரத்து 300 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இந்தநிலையில் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பிரகாஷ் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர் என போலியாக சான்றிதழ் கொடுத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளதாகவும், அவர் பெற்ற வெற்றியை ரத்து செய்து மறு தேர்தல் நடத்தக்கோரியும் பெருமுகை கிராம மக்கள் ஏராளமானோர் சத்தி-அத்தாணி சாலையில் நேற்று திரண்டனர். பின்னர் இரவு 7 மணி அளவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்ததும் கோபி தாசில்தார் விஜயகுமார், கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் மற்றும் பங்களாப்புதூர் போலீசார் அங்கு சென்று மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அதிகாரிகள் கூறும்போது, பெருமுகை ஊராட்சி தலைவராக பிரகாஷ் பதவி ஏற்பது தற்போது நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மற்ற 9 வேட்பாளர்களும் தங்கள் கோரிக்கை குறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டரிடம் மனு அளியுங்கள் என்றனர்.
அதை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் சத்தியமங்கலம்-அத்தாணி சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.