திருட்டு, சங்கிலி பறிப்பு வழக்குகளில் பெண் உள்பட 10 பேர் கைது ரூ.96 லட்சம் தங்க நகைகள், வாகனங்கள் மீட்பு

பெங்களூருவில் திருட்டு, சங்கிலி பறிப்பு வழக்குகளில் ஈடுபட்டு வந்த பெண் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.96 லட்சம் தங்க நகைகள், வாகனங்கள் மீட்கப்பட்டு உள்ளன.
Published on

பெங்களூரு,

பெங்களூரு வடகிழக்கு மண்டல போலீசார், நகரில் திருட்டு, சங்கிலி பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கும்பலை கைது செய்து, அவர்களிடம் இருந்து நகைகள், வாகனங்களை மீட்டு இருந்தனர். அவற்றை, அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி பெங்களூரு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

மீட்கப்பட்ட நகைகளை, போலீஸ் கமிஷனர் சுனில்குமார் பார்வையிட்டார். பின்னர் அவர், நகைகள், வாகனங்களை அவற்றின் உரிமையாளர்களிடம் வழங்கினார். முன்னதாக போலீஸ் கமிஷனர் சுனில்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

பெங்களூரு வடகிழக்கு மண்டலத்தில் உள்ள எலகங்கா, வித்யாரண்யபுரா, கொத்தனூரு, சிக்கஜாலா ஆகிய போலீசார், நகரில் திருட்டு, கொள்ளை, சங்கிலி பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ஒரு பெண் உள்பட 10 பேரை கைது செய்துள்ளனர். கைதானவர்கள் கொடுத்த தகவலின் பேரில் 2 கிலோ தங்க நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்கள், ஒரு மோட்டார் சைக்கிள், 4 கார்கள், ஒரு துப்பாக்கி ஆகியவை மீட்கப்பட்டுள்ளன. அவற்றின் மதிப்பு ரூ.96 லட்சம் ஆகும்.

குறிப்பாக வித்யாரண்யபுரா போலீசார், சங்கிலி பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த மராட்டிய மாநிலத்தை சேர்ந்த முகமது அலி, சையத் கரார் உசேன் ஆகிய 2 பேரையும் கைது செய்துள்ளனர். இவர்கள் 2 பேரும் இரானி கும்பலை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அவர்களை கைது செய்திருப்பதன் மூலம் 20 சங்கிலி பறிப்பு சம்பவங்களில் தீர்வு காணப்பட்டுள்ளது. குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கும்பலை திறமையாக செயல்பட்டு பிடித்த வடகிழக்கு மண்டல போலீசாருக்கு ரொக்க பரிசு வழங்கப்படும். இவ்வாறு போலீஸ் கமிஷனர் சுனில்குமார் கூறினார்.

பேட்டியின் போது கிழக்கு மண்டல சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் உடன் இருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com