கூடுதலாக 440 ஆசிரியர்கள் உள்ளனர்: பணியிடங்களுக்கேற்ப மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் முதன்மைக்கல்வி அலுவலர் அறிவுறுத்தல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கூடுதலாக 440 ஆசிரியர்கள் உள்ளனர் எனவும், ஆசிரியர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் எனவும் முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் அறிவுறுத்தியுள்ளார்.
கூடுதலாக 440 ஆசிரியர்கள் உள்ளனர்: பணியிடங்களுக்கேற்ப மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் முதன்மைக்கல்வி அலுவலர் அறிவுறுத்தல்
Published on

செய்யாறு,

செய்யாறு கல்வி மாவட்டத்தில் பணியாற்றும் தலைமைஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காணொலி காட்சி மூலம் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் அவரது அலுவலகத்திலிருந்தவாறு காணொலி காட்சி மூலம் ஆலோசனை வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

அரசு பொதுத்தேர்வில் திருவண்ணாமலை மாவட்டமானது 2018-2019-ம் கல்வியாண்டில் தேர்ச்சி விகிதத்தில் அதிகரித்துள்ளது. 10-ம் வகுப்பு தேர்ச்சியில் மாநில அளவில் 20-வது இடத்தினை பெற்ற பெருமை, புகழ் அதற்காக உழைத்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களை சேரும். 100 சதவீத தேர்ச்சி அளித்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பாடத்தில் 100 சதவீத தேர்ச்சி அளித்த ஆசிரியர்களையும் பாராட்டும் விதமாக பாராட்டு விழா நடத்தப்படும். அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட கல்வி அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர். மாவட்டத்தில் உள்ள 5 கல்வி மாவட்டத்தில் செய்யாறு கல்வி மாவட்டம் 98 சதவீதம் பெற்று மாவட்ட தேர்ச்சி சதவீதத்தை விட அதிகம் பெற்றுள்ளது பாராட்டுக்குரியது.

மாவட்டத்தில் அரசுப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க செய்திட வேண்டும். அதற்காக மே மாதம் முழுவதும் தலைமை ஆசிரியர்கள் பள்ளியை திறந்து வைத்து மாணவர்கள் சேர்க்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மாணவர்கள் அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்களை கணக்கிடும்போது மாவட்டத்தில் 440 ஆசிரியர் பணியிடங்கள் கூடுதலாக இருக்கிறது. இதே நிலைநீடித்தால் கூடுதலாக உள்ள ஆசிரியர் பணியிடங்களின் நிலை கேள்விக் குறியாகிவிடும். ஆசிரியர் பணியிடத்தினை தக்க வைத்துக்கொள்ள தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கிராமங்களில் வீடு வீடாக சென்று பெற்றோர்களை சந்தித்து மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்.

மே மாதத்தில் மாணவர்கள் சேர்க்கைக்காக பெற்றோர்கள் பள்ளிக்கு வரும் போது பள்ளி பூட்டி இருப்பதாக புகார் வந்தால் அத்தகைய பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடும். பள்ளி வளாகத்தின் முன்பு ஆங்கில வழி மற்றும் தமிழ் வழியில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது என்கிற தகவலை டிஜிட்டல் பேனர் வைத்து பெற்றோர்களுக்கு தெரியப்படுத்திட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட கல்வி அலுவலர் பி.பொய்யாமொழி, பள்ளி துணை ஆய்வாளர் எஸ்.புகழேந்தி உள்பட பள்ளி தலைமை ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com