வரி வசூலிக்க பல வழிகள் உள்ளன: கொரோனா பரவும் நேரத்தில் பள்ளிக்கூட வாசலில் குப்பை தொட்டி வைத்தது ஏன்? - மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி

வரி வசூலிக்க பல வழிகள் உள்ளன. ஆனால் கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில் மழலையர் பள்ளிக்கூட வாசலில் குப்பை தொட்டி வைத்தது ஏன்? என கேள்வி எழுப்பிய மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள், அதனை உடனே அகற்றவும் உத்தரவிட்டனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த ராமராஜ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
Published on

மதுரை,

ராஜபாளையம் நகரில் வீட்டு வரி, தொழில் வரி, தொழிற்சாலை வரி, வணிக வரி என பல்வேறு வகையிலான வரி செலுத்துபவர்கள் 52 ஆயிரம் பேர் உள்ளனர். ராஜபாளையம் நகராட்சியில் கூடுதலாக வரி வசூலிப்பதை கண்டித்து பொதுமக்களும், வியாபாரிகளும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து நகராட்சி ஆணையரிடம் நேரில் முறையிட்டும் வரியை குறைக்கவில்லை. ஆனால் அவர்கள் விதித்த வரியை வசூலிக்கும் நோக்கத்தில் கழிவுநீர் வடிகால் வசதிகளை செய்து கொடுக்காமலும், சில இடங்களில் குப்பைகளை எடுக்காமலும் நகராட்சி பணியாளர்கள் அடாவடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ராஜபாளையத்தில் ஒரு சில தனியார் பள்ளிகள் வரி செலுத்தவில்லை என்ற காரணத்தை கூறி மாணவர்கள் சென்று வரும் வழியில் குப்பை தொட்டியை வைத்துள்ளனர்.

குறிப்பாக ஒரு தனியார் மழலையர் பள்ளி முன்பு நடைபாதையில் குப்பைதொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் குழந்தைகள் பள்ளிக்கு சென்று வர முடியாமல் சிரமப்படுகின்றனர். வரி செலுத்தவில்லை என்றால் ஜப்தி செய்யும் உரிமை நகராட்சிக்கு உள்ளது.

ஆனால் இதுபோன்று பள்ளிக்கூட வாசலிலேயே குப்பை தொட்டியை வைத்துள்ளது கண்டிக்கத்தக்கது. எனவே குப்பை தொட்டியை அங்கிருந்து உடனடியாக அகற்றவும் நகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் ஹெரால்ட்சிங், தனியார் பள்ளி முன்பு வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டியில் கோழி இறைச்சி, மீன் இறைச்சி போன்ற கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களுக்கு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வரி செலுத்தவில்லை என்பதற்காக வீடுகளின் முன்பாகவும், நடைபாதைகள், மார்க்கெட் என பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் குப்பை தொட்டிகளை வைத்துள்ளனர் என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், வரி வசூல் செய்வதற்கு பல வழிகள் உள்ளன. அதையெல்லாம் விட்டுவிட்டு பள்ளிக்கூடத்தின் வாசலில் நோய் பரப்பும் வகையில் குப்பை தொட்டியை வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது. அனைவரிடத்திலும் வரியை வசூலிக்க முறையான நடவடிக்கையை நகராட்சியினர் எடுத்தீர்களா? கொரானா உள்ளிட்ட தொற்றுநோய்கள் பரவும் நேரத்தில் பள்ளியின் முன் குப்பை தொட்டியை வைத்தது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பின்னர் பள்ளிக்கூடத்தின் முன்பு உள்ள குப்பை தொட்டியை உடனடியாக அகற்றி, அதுதொடர்பான புகைப்படத்தை இன்று பிற்பகலிலேயே கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் நகராட்சி அதிகாரிகள் நேரில் ஆஜராக உத்தரவிடப்படும் என்று கூறி, வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

பின்னர் சம்பந்தப்பட்ட பள்ளியின் முன்பு வைத்திருந்த குப்பை தொட்டியை அகற்றி, அதுதொடர்பான புகைப்படத்தை அதிகாரிகள் கோர்ட்டில் சமர்ப்பித்தனர். இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை முடித்துவைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com