அசுர வேக பயணத்தை தடுக்க நடவடிக்கை இல்லை: அலட்சியத்தால் அதிகரிக்கும் விபத்துகள்

தேனி மாவட்டத்தில் தனியார் பஸ்கள், லாரிகளின் அசுர வேக பயணத்தால் வாகன விபத்துகள் அதிகரித்து வருகின்றன. நிரந்தர தீர்வு காண மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.
Published on

தேனி,

தேனி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளில் நடந்த கோர விபத்துகள் பலவும், தனியார் பஸ்களின் அசுர வேக பயணத்தில் தான் நிகழ்ந்துள்ளன. நகர் பகுதியாக இருந்தாலும், புறநகர் பகுதியாக இருந்தாலும் தனியார் பஸ்கள், லாரிகளின் அசுர வேகம் கட்டுப்படுத்தப்படாத ஒன்றாகவே இருந்து வருகிறது.

நேற்று முன்தினம் தேனி-போடி சாலையில் கோடாங்கிபட்டி தீர்த்தத்தொட்டி அருகில் வேன் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த குழந்தையும் உயிர் இழந்தது. படுகாயம் அடைந்த கர்ப்பிணி உள்பட 13 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தேனி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்துக்கு முக்கிய காரணமே தனியார் பஸ்சின் அசுர வேக பயணம் தான் என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். பஸ் டிரைவரையும் கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் கடந்த காலங்களில் இதுபோன்று கோர விபத்துகள் நடந்த பின்னர், தடுப்பு நடவடிக்கையாக விபத்து நடந்த இடத்தில் சாலை தடுப்புகள் வைப்பது தொடர்கதையாக உள்ளது. வாகனங்களின் வேகத்தை குறைக்க நடவடிக்கை எடுக்காமல், விபத்து நடந்த இடத்தில் நினைவு சின்னமாக இதுபோன்ற சாலை தடுப்புகள் வைக்கப்படுவதாக விமர்சனங்களும் எழுகின்றன. அந்த வகையில், நேற்று முன்தினம் கோர விபத்து நடந்த இடத்திலும், போலீஸ் துறை சார்பில் சாலை தடுப்புகள் வைத்து வேகத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், இதுவும் தற்காலிக தீர்வு தான்.

தனியார் பஸ்கள் போட்டிப் போட்டுக் கொண்டு இயக்கப்படுவதும், அசுர வேகத்தில் செல்வதும் தொடர் கதையாக உள்ளது. அசுர வேகத்தில் இயக்கப்படும் தனியார் பஸ்கள் மீது போலீஸ் அதிகாரிகளோ, வட்டார போக்குவரத்து அதிகாரிகளோ நடவடிக்கை எடுப்பது இல்லை என்பது மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போல், விபத்துகள் நடந்த பின்னர் தற்காலிக நடவடிக்கை எடுப்பதை தவிர்த்து, நிரந்தர தீர்வு காண வேண்டியது முக்கியத் தேவையாக உள்ளது. மாவட்டத்தில் இயக்கப்படும் தனியார் பஸ்கள் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு இயக்கப்படும் பயண நேரத்தை மாற்றியமைக்க வேண்டும். அதிக பயணிகளை ஏற்ற வேண்டும் என்பதற்காக பஸ் நிலையத்தில் கூடுதல் நேரம் நிறுத்தி வைத்துக் கொள்வதும், அடுத்த பஸ் நிலையத்துக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாகவே சென்று கூடுதல் நேரம் நிறுத்தி பயணிகளை ஏற்றிக் கொள்வதற்காகவும், பயண தூரத்தை குறுகிய நேரத்தில் கடக்க வேண்டும் என்பதற்காகவும் இதுபோன்ற அசுர வேக பயணங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதுபோன்ற அசுர வேக பயணங்களை தடுக்க போலீஸ் துறையோ, வட்டார போக்குவரத்து அதிகாரிகளோ நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருப்பதால் விபத்துகள் அதிகரித்து மனித உயிர்கள் பரிதாபமாக பறிபோகின்றன.

அவசர கால மருத்துவ சேவை, மீட்பு பணிக்காக இயக்கப்படும் ஆம்புலன்ஸ் வேன்களில் கூட, வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டு உள்ளது. குறிப்பிட்ட வேகத்துக்கு மேல் ஆம்புலன்ஸ்கள் செல்ல முடிவது இல்லை. ஆனால், பயணிகளை ஏற்றிச் செல்லும் தனியார் பஸ்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தப்படுவது இல்லை. எனவே, பயண நேரத்தை கணித்து, குறிப்பிட்ட வேகத்தில் பஸ்கள் இயங்குவதற்கு வேகக்கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்த வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகமாவது இத்தகைய பிரச்சினையில் தனிக்கவனம் செலுத்தி, நிரந்தர தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com