

திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் ஆஸ்திரேலியாவில் காணக்கூடிய அபூர்வமான வெள்ளை மயில்கள் இங்கு ஏராளமாக காணப்படுகின்றன. இதே போல மனிதனின் அடையாளமான குரங்குகளும் ஏராளமாக உள்ளன. மயில்கள், குரங்குகளுக்கு உணவு, குடிநீர் வசதி இல்லாததால் இரை தேடி இடம் விட்டு இடம் பெயர்ந்து வருகிறது. இதில் அபூர்வமான வெள்ளை மயில்கள் இரை தேடி சென்றன. மீண்டும் இருப்பிடம் திரும்பவில்லை. எனவே வெள்ளை மயில் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
கிரிவலம் வரக்கூடியவர்களில் ஒரு சிலர் பறவைகளுக்கும் விலங்குகளுக்குமாக அவ்வப்போது இரை வாங்கி போடுகின்றனர். அதன் மூலம் ஓரளவிற்கு உணவு கிடைத்தது. ஆனால் தண்ணீர் இல்லாமல் தாகத்தால் மிகவும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
இந்த நிலையில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. மயில்கள், குரங்குகள், இரை,தண்ணீர் இன்றி இடம் விட்டு இடம் பெயரும் நிலையில் மயங்கி சுருண்டன. அதை கோவில் நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து வன ஆர்வலர்கள் திருநகரில் உள்ள ஊர்வன அமைப்புக்கு தகவல் கொடுத்து விலங்குகள் பறவைகளை காப்பாற்றுமாறு வலியுறுத்தினர்.
இதனையொட்டி ஊர்வன அமைப்பாளர்கள் சகாதேவன், விஷ்வா ஆகியோர் ஊர்வன அமைப்பின் தன்னார்வ தொண்டர்களுடன் தாகம் தணிக்கும் களப்பணி செய்தனர். அதில் விலங்குகளுக்காகவே உருவாக்கப்பட்டுள்ள தொட்டியில் தண்ணீர் நிரப்பினார்கள். மேலும் கம்பு, சோளம் உள்ளிட்ட தானியங்களை இரையாக போட்டனர்.
இந்த நிலையில் மலை முகடுகளில் இருந்து குரங்குகள் தாவிக்குதித்து வந்து தொட்டியில் நிரப்பப்பட்ட தண்ணீரை குடித்து தாகத்தை தனித்தன. அதேபோல மயில்களும் பறந்து வந்து தண்ணீரை குடித்தன. அதைக்கண்ட ஊர்வன அமைப்பினர் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறும்போது, பறவைகளுக்கும் விலங்குகளுக்குமாக கல்வெட்டு குகைக்கோவில் அருகே அரசு சார்பில் நிரந்தரமாக இரை மற்றும் குடிநீர் வசதி செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.