திருவண்ணாமலை மாவட்டத்தில் 22 நாட்களில் ரூ.2 கோடி பறிமுதல் தேர்தல் அதிகாரிகள் தகவல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 22 நாட்களில் பறக்கம் படை, நிலை கண்காணிப்பு குழுவினர் ரூ.2 கோடி பறிமுதல் செய்ததாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 22 நாட்களில் ரூ.2 கோடி பறிமுதல் தேர்தல் அதிகாரிகள் தகவல்
Published on

திருவண்ணாமலை,

தமிழகத்தில் வருகிற 18ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்து உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, செங்கம், கீழ்பென்னாத்தூர், கலசபாக்கம், போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி என 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. தேர்தல் நடத்தை விதி மீறல்கள் குறித்து 24 மணி நேரம் கண்காணிக்க திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா 3 என 24 பறக்கும் படை மற்றும் 24 நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு இருந்தது.

அதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் கூடுதலாக 48 பறக்கும் படை அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். இதில் கடந்த 16ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை என கடந்த 22 நாட்களில் பறக்கும் படையினர் வாகன சோதனையின் போது உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.1 கோடியே 26 லட்சத்து 26 ஆயிரத்து 721 பறிமுதல் செய்து உள்ளனர்.

அதேபோல நிலை கண்காணிப்பு குழுவினரும் வாகன சோதனையின் போது உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.68 லட்சத்து 25 ஆயிரத்து 160 பறிமுதல் செய்தனர். ஆக மொத்தம் திருவண்ணாமலை மாவட்டத்தில் பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு கு வினர் மூலம் வாகன சோதனையில் ரூ.1 கோடியே 94 லட்சத்து 51 ஆயிரத்து 881 பறிமுதல் செய்யப்பட்டது. இதில் உரிய விசாரணைக்கு பின்னர் சம்பந்தப்பட்டவர்களிடம் ரூ.1 கோடியே 7 லட்சத்து 95 ஆயிரத்து 481 விடுக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள ரூ.86 லட்சத்து 56 ஆயிரத்து 100 அதிகாரிகள் மூலம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த தகவலை தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com