திருவொற்றியூர்,
திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. பூலோக கைலாயம் என்று அழைக்கப்படும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு மாசி பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் சாமிக்கு தினமும் சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடந்தது.
தேரோட்டம்
விழாவின் முக்கிய நிகழ்வான சந்திரசேகரர் திருத்தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி காலை 7.30 மணியளவில் கோவிலில் இருந்து உற்சவர் சந்திரசேகரர்-வடிவுடையம்மன் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளினர். பின்னர் பரிவார பூஜைகள் செய்யப்பட்டு காலை 8.50 மணியளவில் 41 அடி உயரமுள்ள தேர், சன்னதி தெருவிலுள்ள 16 கால் மண்டபத்தில் இருந்து கைலாய வாத்தியங்கள் முழங்க, சிவாச்சாரியார்கள் பச்சைக்கொடி அசைக்க புறப்பட்டது.
திருவொற்றியூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு வரலட்சுமி, முன்னாள் எம்.எல்.ஏ. கே.குப்பன், கோவில் உதவி கமிஷனர் சித்ராதேவி உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ஒற்றீஸ்வரா, தியாகராஜா என்று பக்தி கோஷங்களை எழுப்பியபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மாணவிகள் கோலாட்டம்
தேர் சன்னதி தெருவில் இருந்து புறப்பட்டு திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வந்து தெற்கு மாட வீதி, மேற்கு மாடவீதி, வடக்கு மாடவீதிகள் வழியாக மீண்டும் திருவொற்றியூர் நெடுஞ்சாலை வழியாக சன்னதி தெரு வந்து பகல் 2 மணியளவில் நிலையை வந்தடைந்து.
தேருக்கு முன்னால் சங்க நாதம் முழங்க சிவனடியார்கள் நடனமாடியபடியும், பள்ளி மாணவிகள் கோலாட்டம், பரதநாட்டியம் ஆடியபடியும் சென்றனர். தேர் செல்லும் வழியில் ஆங்காங்கே நின்றிருந்த பக்தர்கள் தீபாராதனை காட்டி வழிபட்டனர். தேர் செல்லும் வழியில் வெப்பத்தை தணிக்க மாநகராட்சி சார்பில் தண்ணீர் தெளிக்கப்பட்டது.
திருக்கல்யாணம்
தேரோட்டத்தில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு உபயதாரர்கள் நீர் மோர் வழங்கினர். தேரானது திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் 45 அடிக்கும் உயரமாக அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரெயில் தூண்களுக்கு இடையே சென்றதை பக்தர்களும் பொதுமக்களும் ஆச்சரியமாக பார்த்து வணங்கி சென்றனர். சிலர் தங்கள் செல்போன்களில் படம் பிடித்தனர்.
விழாவில் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேர் செல்லும் நேரத்தில் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றி விடப்பட்டது.
விழாவில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) திருக்கல்யாணம், 10-ந்தேதி இரவு 18 திருநடனம், தியாகராஜர் பந்தம் பறி உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகின்றது.