இது காளை ஆட்டம்: நல்லதை சொல்லும் நாட்டுப்புற கலைகள்

நாட்டுப்புற கலைகள் அனைத்தும் மக்களின் வாழ்வியலோடு இணைந்தவையாக இருக்கின்றன.
இது காளை ஆட்டம்: நல்லதை சொல்லும் நாட்டுப்புற கலைகள்
Published on

பெரும்பாலும் அவர்களின் தொழில், வழிபாடு, பொழுதுபோக்கு ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருக்கிறது. மக்களின் மகிழ்ச்சியின் மையமாக நாட்டுப்புற கலைகள் திகழ்கின்றன.

தமிழக மக்கள் கால்நடைகளிடம் அன்பு செலுத்துபவர்களாக இருக்கிறார்கள். விவசாயம் செய்வோர் ஆடுகள், மாடுகளை தங்கள் குடும்ப அங்கத்தினர் போல் பராமரிக்கும் மாண்புடையவர்கள். அப்படி கால்நடைகளோடு வாழ்க்கையை நகர்த்தும் மக்கள் அவற்றின் இயல்புகளை நன்கு அறிந்து வைத்திருப்பதுண்டு. கால்நடைகளின் அசைவுகள், பழக்கவழக்கங்கள், இயல்புகள் என அத்தனையையும் துல்லியமாக கண்டுணர்ந்து அதற்கேற்ப அவற்றுடன் இணைந்து வாழ்ந்து வருகிறார்கள்.

அத்தகைய விவசாயிகளையும், கிராமத்து மக்களையும் மகிழ்விக்க உருவான நாட்டுப்புற கலைகளில் ஒன்று, காளை ஆட்டம். இது முகப்போலி நடன வகையை சார்ந்தது.

முகப்போலி நடனவகை என்பது, போலியான உருவங்கள் மூலம் அதன் அசைவு களையும், செய்கைகளையும் செய்துகாட்டி பார்வையாளர்களை கவர்ந்து ரசிக்கச் செய்வதாகும். இதில் நமது பாரம்பரிய விவசாயத்திற்கு ஆணி வேராக இருக்கின்ற காளைகளின் அசைவு மற்றும் அதனுடைய செயல்பாடுகளை வெளிப்படுத்தும் வண்ணமாக காளை ஆட்டம் திகழ்கிறது. காளை தலையை அசைத்து சீறிப்பாய்ந்து குதித்தோடி உடம்பை சிலிர்த்து எப்படி எல்லாம் ஓடுமோ அப்படி எல்லாம் குதித்து இந்த காளை ஆட்ட கலைஞர்கள் ஆடுவது தனிச்சிறப்பாகும். காளையின் துடிப்பும், உற்சாகமும் காளை ஆட்ட கலைஞர்களிடம் இருக்கும்.

காளை ஆட்டம் கோவில் திருவிழாக்களிலும், ஊர்வலங்களிலும் அதிக அளவில் இடம் பெற்று வந்தன. பெரும்பாலும் கரகாட்டத்தின் துணை ஆட்டமாக இடம் பெறுகிறது. காளையாட்டத்தில் கரகாட்ட கலைஞர்களில் ஒருவர் காளையை அடக்குவது போன்ற காட்சி ஒன்று இடம்பெறும். இது பார்வையாளர்களை அதிகம் கவரும். மேலும் பார்வையாளர் பகுதிக்குள் புகுந்து அவர் களிடம் சீறிப்பாய்ந்து அவர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும் காளையாட்டம் அமைகிறது. இதனால் காளையாட்டம் வீரத்தையும் வெளிப்படுத்துகிறது.

ஒரு சில இடங்களில் தவில் வாசிப்பவர் கரகம் ஆடும் பெண்ணை தனது மகளாக பாவித்து சகக்கலைஞரிடம் இந்த காளையை அடக்கினால் நீ என் மகளை திருமணம் செய்து கொள்ளலாம் என பந்தயம் கட்டுவதும், கரகாட்ட கலைஞர் அந்த பந்தயத்திற்கு தயாராகி காளையை அடக்குவது போன்ற கதையை வைத்து நிகழ்த்தி காட்டுவதும் மக்களிடம் அதிக வரவேற்பை பெறுகிறது. இதுபோன்று பலவிதங்களில் யதார்த்தமாக இந்த ஆட்டத்தை அமைக்கிறார்கள்.

காளையாட்டம் நிகழ்த்துவதற்கு என்று தனிப்பட்ட முறையில் கலைஞர்கள் இல்லை. மயிலாட்டம் ஆடுபவரே காளையாட்டமும் ஆடுகின்றனர். பெரும்பாலும் மயிலாட்டமும், காளையாட்டமும் இணைந்தே நிகழ்த்தப்படுகிறது. இப்போது கோவில் திருவிழா, அரசு கலைவிழா, ஊர்வலங்கள், திருமண விழாக்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளிலும் காளை ஆட்டம் நடத்தப்படுகிறது.

காளை ஆட்டத்திற்கு தேவையான காளை உருவ பொம்மைகள் மூங்கில் மற்றும் பிரம்புகள், மரக்கூழ், காகிதக் கூழ் ஆகியவற்றை பயன்படுத்தி செய்யப்படுகின்றன. பின்பு அதனை வெயிலில் காயவைத்து மெருகேற்றுகின்றனர். பின்னர் வர்ணம் பூசி அழகுபடுத்தப்படுகிறது. இப்படிதான் காளை ஆட்ட உருவ பொம்மைகள் தயாராகின்றன.

காளை ஆட்டத்தில் நாதஸ்வரம், தவில், பம்பை, உருமி போன்ற இசைக் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. உருமி இசைக் கருவியின் சத்தம் காளையாட்டத்திற்கு அதிக உற்சாகத்தை தருகிறது. காளையாட்டம் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது. மாநிலத்தை கடந்தும் இந்த கலைக்கு அதிக வரவேற்பு இருக்கிறது.

- கலை வ(ள)ரும்.

தகவல்: இளவழகன், நாட்டுப்புற கலைகள் துறை பகுதிநேர விரிவுரையாளர், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com