தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு “எடப்பாடி பழனிசாமி பதில் சொல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது” டி.டி.வி.தினகரன் பேச்சு

“தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் சொல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது” என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.
Published on

தூத்துக்குடி,

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் சுந்தரராஜை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று பிரசாரம் செய்தார். அவர் நேற்று மாலையில் புதுக்கோட்டையில் இருந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

அங்கு திரண்டு இருந்த கூட்டத்தினர் மத்தியில் பரிசு பெட்டகம் சின்னத்துக்கு வாக்கு கேட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல், இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சி படுதோல்வி அடையும் என்பதால், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேலும் 3 எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் மூலம் நோட்டீஸ் கொடுத்தார். ஆனால் உச்சநீதிமன்றம் தடை விதித்து விட்டது. இந்த ஆட்சி வருகிற 23-ந் தேதியுடன் முடிவுக்கு வருவது உறுதியாகிவிட்டது. ஏற்கனவே அ.தி.மு.க.வுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்-அமைச்சர் பதவி கொடுத்தனர். ஆனால் அ.தி.மு.க.வுக்கு வாக்களித்த 18 பேருக்கு தகுதிநீக்கத்தை எடப்பாடி பழனிசாமி வழங்கி உள்ளார். இந்த ஆட்சி மக்களால் அகற்றப்படும் நிலை உருவாகி விட்டது. அதனால்தான் செல்லும் இடமெல்லாம் என்னை வாய்க்கு வந்தபடி பேசுகிறார்.

நான் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து இருப்பதாக கூறுகிறார். தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெறுவதற்காக நாங்கள் வேட்பாளரை நிறுத்தி இருப்பதாக கூறுகிறார். ஆர்.கே.நகரில் தி.மு.க.வை டெபாசிட் இழக்க செய்தவர்கள் நாங்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிடம் இருந்த வெற்றி சின்னமான இரட்டை இலை சின்னத்தில் துரோக கறை படிந்து இருப்பதால், ஆர்.கே.நகர் மக்கள் துரோகத்துக்கு வாக்களிக்க மாட்டோம் என்று இரட்டை இலையை தோற்கடித்தனர்.

நாங்கள் தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கவில்லை என்பது மக்களுக்கு தெரியும். கடந்த முறை சுந்தரராஜ் 500 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த முறை 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யுங்கள். 2-வது இடத்துக்குதான் மற்றவர்கள் போட்டியிட்டு வருகின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின்போது போராடிய மக்கள் 13 பேரை சுட்டுக்கொலை செய்தது எடப்பாடி பழனிசாமி அரசு. அதற்கு மே 23-க்கு பிறகு அவர் தமிழக மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது. அந்த 13 பேரை போலீசார் சுடுவதற்கு யார் காரணமாக இருந்தார்கள்?, யார் அவர்களுக்கு ஆணையிட்டார்கள்? என்பதை வெளிக் கொண்டு வரும் நேரம் வந்து விட்டது. நிரந்தரமாக ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் பரிசு பெட்டகம்.

தமிழக மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் தமிழகத்தில் அனுமதிக்க விடமாட்டோம் என்ற உறுதியோடு செயல்பட்டு வரும் கட்சி அ.ம.மு.க., ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்பதை விட, தமிழகத்தில் உள்ள துரோகிகளை ஒழித்து கட்ட வேண்டும். ஏற்கனவே 5 முறை ஆட்சி செய்த தி.மு.க. ஆட்சிக்கு வந்து மக்களுக்கு பயன் இல்லை என்பது எடுத்துக்கூறி உண்மையான மக்கள் ஆட்சியை தமிழகத்தில் உருவாக்க நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் பரிசுபெட்டகம் என்பதை எடுத்துக்கூற வந்து உள்ளேன். மோடியின் தவறான பொருளாதார கொள்கையால் மூடப்பட்ட தொழிற்சாலைகளை மீண்டும் திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆகையால் நீங்கள் பரிசு பெட்டகம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்யுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து அவர் கோரம்பள்ளம், தூத்துக்குடி ஹவுசிங் போர்டு, மாப்பிள்ளையூரணி, டேவிஸ்புரம், தாளமுத்துநகர், தருவைகுளம் ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பிரசாரத்தில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com