பெண் உள்பட 3 பேர் கொலை: ‘450 கிலோ வெள்ளியை கொள்ளையடிக்க ஒத்துழைக்காததால் கழுத்தை அறுத்து கொன்றோம்’ கைதானவர்கள் வாக்குமூலம்

சேலத்தில் பெண் உள்பட 3 பேர் கொலையில் கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். அவர்கள் 450 கிலோ வெள்ளியை கொள்ளையடிக்க ஒத்துழைக்காததால் கழுத்தை அறுத்து கொன்றோம் என்று தெரிவித்துள்ளனர்..
பெண் உள்பட 3 பேர் கொலை: ‘450 கிலோ வெள்ளியை கொள்ளையடிக்க ஒத்துழைக்காததால் கழுத்தை அறுத்து கொன்றோம்’ கைதானவர்கள் வாக்குமூலம்
Published on

சேலம்,

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ்(வயது 27). இவரது மனைவி வந்தனா(23). இவர்களுக்கு 6 மாத ஆண் குழந்தை உள்ளது. ஆகாசின் உறவினரின் மகன் சன்னிகுமார்(15). இவர்கள் சேலம் இரும்பாலை அருகே உள்ள பெருமாம்பட்டி கிலான் வட்டத்தை சேர்ந்த வெள்ளிப்பட்டறை நடத்தி வரும் தங்கராஜ் என்பவரது வீட்டில் தங்கி வெள்ளி ஆபரண தயாரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்தநிலையில் கடந்த 8-ந் தேதி இரவு ஆகாஷ், வந்தனா, சன்னிகுமார் ஆகிய 3 பேரும் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் இரும்பாலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

கேரளாவில் 3 பேர் கைது

மேலும் சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், ஆகாசின் வீட்டில் இருந்து 5 வாலிபர்கள் வெளியே செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே உள்ள மகாவீர் நகரை சேர்ந்த வினோத், தினேஷ், விஜய் உள்பட 5 பேர் என்பதும், கடந்த 7-ந் தேதி தான் தங்கராஜ் வெள்ளிப்பட்டறையில் வேலைக்கு சேர்ந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை பிடிக்க 3 தனிப்படை அமைத்து போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். கொலையாளிகளின் செல்போன் சிக்னல் மூலம் அவர்கள் கேரள மாநிலம் பாலக்காடு ரெயில் நிலையத்தில் சுற்றித்திரிவது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று வினோத், தினேஷ், விஜய் ஆகியோரை கைது செய்து சேலம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

பரபரப்பு வாக்குமூலம்

மேலும் கைதான 3 பேரும் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

உத்தரபிரதேசத்தை சேர்ந்த வினோத், தினேஷ், விஜய் உள்பட 5 பேரும் ஏற்கனவே சேலத்தில் சில வெள்ளிப்பட்டறைகளில் வேலை பார்த்துள்ளனர். பின்னர் அவர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று விட்டனர். தற்போது சொந்த ஊரில் இருந்து கடந்த 7-ந் தேதி சேலத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் வெள்ளிப்பட்டறை அதிபர் தங்கராஜிக்கு சொந்தமான வெள்ளிப்பட்டறையில் வேலைக்கு சேர்ந்தனர்.

வெள்ளிப்பட்டறைக்கு அருகிலேயே தங்கராஜ் வீடு உள்ளது. மேலும் பட்டறைக்கு அருகில் உள்ள வீட்டிலேயே அவர்கள் தங்கி இருந்துள்ளனர். இதனிடையே தங்கராஜ் வீட்டில் எப்போதும் 100 கிலோவுக்கு மேல் வெள்ளிக்கட்டிகள் இருப்பதை தெரிந்து கொண்ட அவர்கள் அதை கொள்ளையடிக்கும் எண்ணத்தில் இருந்தனர். மேலும் ஊரில் இருந்து வரும் போதே 3 கத்திகள் வாங்கி கொண்டு வந்துள்ளனர்.

450 கிலோ வெள்ளிக்கட்டிகள்

இதற்கிடையே தங்கராஜ் வீட்டில் 450 கிலோ வெள்ளிக்கட்டிகள் இருப்பதை அறிந்தனர். பின்னர் அவர்கள், தங்கராஜை கொன்று விட்டு, வெள்ளிக்கட்டிகளை கொள்ளையடிப்பதற்காக திட்டமிட்டு சம்பவத்தன்று இரவு அங்கு சென்றனர். மேலும் அவர்களுக்கும் சேர்த்து ஆகாஷின் மனைவி வந்தனா உணவு சமைத்து வைத்துள்ளார்.

அங்கு அவர்கள் தங்களது கொள்ளை திட்டம் குறித்து ஆகாஷிடம் தெரிவித்துள்ளனர். அதற்கு ஆகாஷ், வேலை கொடுத்த முதலாளிக்கு துரோகம் செய்யக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்ததுடன், இது குறித்து முதலாளியிடம் தெரிவிப்பேன் என்று கூறி உள்ளார்.

இதனால் தங்களுடைய திட்டம் வெளியே தெரிந்ததால் காட்டி கொடுத்துவிடுவான் என்ற ஆத்திரத்திலும், கொள்ளை திட்டத்துக்கு ஒத்துழைக்காததாலும் அவர்கள் முதலில் ஆகாசை கழுத்தை அறுத்து கொலை செய்தனர். இதை பார்த்து தடுக்க வந்த சன்னிகுமாரை கொன்றனர். அதன் பிறகு தான் அவர்கள் வந்தனாவை கழுத்தை அறுத்து கொன்று உள்ளனர். பின்னர் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

உயிர் தப்பிய வெள்ளிப்பட்டறை அதிபர்

வந்தனாவை பாலியல் பலாத்காரம் செய்யும் நோக்கில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் முதலில் கருதினர். ஆனால் தற்போது வெள்ளிப்பட்டறை அதிபர் தங்கராஜை கொன்றுவிட்டு 450 கிலோ வெள்ளிக்கட்டிகளை கொள்ளையடித்து செல்ல முயன்றது அம்பலமாகி உள்ளது. 3 பேரை கொன்று விட்டு சென்றதால், வெள்ளிப்பட்டறை அதிபர் தங்கராஜ் உயிர் தப்பி உள்ளார். தொடர்ந்து கைதான 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலையில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் கொலையான ஆகாஷ், வந்தனா, சன்னி குமார் ஆகியோரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com