திருச்சியில் பரபரப்பு: காங்கிரசாரிடம் விருப்பமனு பெற்றபோது மகளிரணி நிர்வாகி ‘திடீர்’ போர்க்கொடி

திருச்சியில், காங்கிரசாரிடம் விருப்பமனு பெற்றபோது, தேர்தல் பணி செய்யாதவர்களுக்கு வாய்ப்பு வழங்கக்கூடாது என மகளிரணி நிர்வாகி திடீர் போர்க்கொடி தூக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Published on

திருச்சி,

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து அரசியல் கட்சிகளும் வரிந்து கட்டிக்கொண்டு, தேர்தலில் யாரை பிடித்தால் சீட் கிடைக்கும் என ஆள்பிடிக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தமிழகத்தில் மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர் பதவிக்கு நேரடியாக தேர்தல் கிடையாது என்றும், தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்களே மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணைத்தலைவர்களை தேர்ந்தெடுப்பார்கள் என அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ஏற்கனவே, அ.தி.மு.க., தி.மு.க., பாரதீய ஜனதா உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து கட்சி தலைமை நிர்வாகிகளிடம் விருப்பமனு கொடுத்து விட்டனர். இந்த நிலையில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கிற காங்கிரஸ் கட்சி சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் வேட்பு மனுக்களை நேற்று முதல் பெற்று வருகிறார்கள்.

மகளிரணி நிர்வாகி போர்க்கொடி

திருச்சி மாநகராட்சி மற்றும் புறநகர் மாவட்டத்தில் கவுன்சிலர்கள் பதவிக்கு போட்டியிட விரும்பும் நிர்வாகிகளிடம் திருச்சி மாவட்ட காங்கிரஸ் தலைமையிடமான அருணாசலம் மன்றத்தில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டது. திருச்சி மாநகராட்சிபகுதியில் 65 வார்டுகளுக்கும் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள், மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஜவகரிடம் விருப்ப மனுக்களை கொடுத்தனர். புறநகர் தெற்கு மாவட்டத்திற்கு தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜிடம் விருப்ப மனுக்களை கொடுத்தனர்.

மாநில பொதுக்குழு உறுப்பினர் ரெக்ஸ், முன்னாள் மாவட்ட தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் திருச்சி மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட மனு கொடுத்தனர். அப்போது மாநில மகளிர் அணி செயலாளர் ஜெகதீஸ்வரி என்பவர், உரத்த குரலில் கூச்சல் எழுப்பி போர்க்கொடி தூக்கினார். அவர் கூறுகையில்,எம்.பி., எம்.எல்.ஏ. தேர்தல்களில் கட்சி வேட்பாளர்களுக்காக வேலை செய்யாதவர்களும் தற்போது விருப்ப மனு கொடுத்துள்ளனர். அவர்களுக்கு சீட் வழங்கக்கூடாது. கடந்த முறை நடந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டது. அதில் பலர் போட்டியிட்டு துணிச்சலாக வாக்காளர்களை சந்தித்து வாக்குகள் கேட்டனர். எனவே, அப்படிப்பட்டவர்களுக்கே மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும். அதே நேரத்தில் தொடர்ந்து மேயர் பதவி, வார்டு கவுன்சிலர் பதவிக்கு நின்றவர்களுக்கு வாய்ப்பு வழங்கக்கூடாது என ஆவேசமாக கூறினார். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தலைமை முடிவெடுக்கும்

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், உள்ளாட்சி தேர்தலில் யார் போட்டியிட வேண்டும் என்பதை மாநில தலைமைதான் முடிவெடுக்கும். மாவட்ட தலைவர்கள் முடிவெடுக்க முடியாது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ளதால் திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில் 5 முதல் 10 வார்டுகளை மட்டுமே காங்கிரசுக்கு ஒதுக்குவார்கள் என கருதுகிறோம். அதற்குள் சீட் ஒதுக்கப்பட்டு விட்டதுபோல ஏன் கூக்குரல் எழுப்ப வேண்டும்? என்று தெரியவில்லை. சனிக்கிழமையன்று (நாளை) காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி வருகிறார். அவரிடம் முறையிட்டு மன்றாட வேண்டியதுதானே என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com