ஆங்கில புத்தாண்டையொட்டி பிள்ளையார்பட்டி கோவிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு

ஆங்கில புத்தாண்டையொட்டி பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.
Published on

திருப்பத்தூர்,

ஆங்கில புத்தாண்டு நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற குடவரை கோவில்களில் ஒன்றான பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் அதிகாலை திருப்பள்ளி எழுச்சியுடன் திருவனந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு கற்பக விநாயகருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. மேலும் நேற்று அதிகாலை 4 மணியில் இருந்தே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மூலவர் கற்பக விநாயகர் தங்க கவசத்துடனும், உற்சவர் வெள்ளி மூஷிக வாகனத்தில் புஷ்ப அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் குடிநீர், உணவு, மருத்துவ மற்றும் சுகாதார வசதிகள் செய்யப்பட்டிருந்தது. மேலும் நேற்று காலை முதல் பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. ஆங்கில புத்தாண்டையொட்டி பிள்ளையார்பட்டி கோவிலுக்கு மதுரை, திருச்சி, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, காரைக்குடி, திருப்பத்தூர், தேவகோட்டை மற்றும் பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதன் மேற்பார்வையில் 4 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் 800-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் தீயணைப்பு படை வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஏற்பாடுகளை கோவில் டிரஸ்டிகள் காரைக்குடி டாக்டர் மெய்யப்ப செட்டியார், குருவிக்கொண்டான்பட்டி பழ.பழனியப்ப செட்டியார் ஆகியோர் செய்திருந்தனர்.

இதேபோல் திருப்பத்தூர் அருகே சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதிகாலையில் உச்சி கால பூஜையுடன் கோவில் நடை திறக்கப்பட்டது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மேலும் திருக்கோஷ்டியூர் முத்தையா கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இது தவிர திருப்புவனம் அருகே மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார், பத்ரகாளியம்மன் கோவில், சிவகங்கை அருகே உள்ள கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோவில், நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோவில், பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி சுவாமி கோவில், காரைக்குடி அருகே வ.சூரக்குடி சிவஆஞ்சநேயர் கோவில் ஆகிய கோவில்களில் புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com