தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பசலனம் காரணமாக இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பசலனம் காரணமாக இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு
Published on

சென்னை,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பசலனம் காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் இயல்பான அளவு பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அதன்படி வடமாநிலங்களான ஒடிசா, மேகாலயா, அசாம் மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. அதேபோல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்திலும் ஓரளவு தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தென்மேற்கு பருவ மழை பெய்து வருகிறது.

கடந்த காலங்களில் பருவமழை முறையாக பெய்யாததால், நீர்நிலைகள் வறண்டு குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே தற்போது பெய்யும் தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளிலும் பெய்ய வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் பொதுப்பணித்துறை மற்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தரப்பிலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் நேற்று கூறியதாவது:-

தென்மேற்கு பருவ மழை தமிழக பகுதிகளில் ஆங்காங்கே பெய்து வருகிறது. நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேர நிலவரப்படி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. பதிவான மழை அளவை பொறுத்தமட்டில் கோவை மாவட்டம் சின்னகல்லார், வால்பாறை ஆகிய இடங்களில் தலா 1 சென்டி மீட்டர் மழை பெய்தது.

தொடர்ந்து மழை இன்று (ஞாயிற்றுக்கிழமை) நீடிக்கும். குறிப்பாக வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையே பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மாநகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதேநேரம் அதிகபட்சம் 35 டிகிரி செல்சியசும், குறைந்த பட்சம் 28 டிகிரி செல்சியசும் வெப்பம் பதிவாக வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com