திருச்செந்தூர் கோவில் மயில் சிலை சேதம்: இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மீது வழக்குப் பதிவு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அறநிலையத்துறை இணை ஆணையர் உள்ளிட்ட 6 பேர் மீது சிலை கடத்தல் தடுப்பு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். #Thiruchendur | #Idoltheft
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படைவீடான சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் உள்ளது. 2,000 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிய மன்னனால் நிர்மாணிக்கப்பட்ட கோவில் என்று வரலாற்றில் குறிப்பிடப்படும் இந்த கோவிலில், மூலவர் சிலைக்கு முன்பு நந்தி சிலையும் அதன் அருகில் இந்திர, தேவ மயில்களின் இரு சிலைகளும் அமைக்கப்பட்டிருந்தன.

இதில் பழமையும் தொன்மையும் கொண்ட தேவ மயில் சிலை, கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6 ந் தேதி சிசிடிவி இணைப்பை துண்டித்து விட்டு, அர்த்தசாம பூஜை முடிந்து கோவிலின் நடை சாத்திய பின்னர், இரவோடு இரவாக மாற்றப்பட்டதாகக் கூறப்படுகின்றது. அதற்கு பதிலாக ஏற்கனவே செய்து தயாராக வைக்கப்பட்டிருந்த புதிய மயில் சிலை ஒன்றை அங்கு வைத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த சிலை மாற்றம் குறித்து, கோவிலின் இணை ஆணையர் பரஞ்சோதிக்கு தகவல் தெரிந்தும், சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்த ஆன்மீக ஆர்வலர் ரெங்கராஜன் என்பவர், இந்துசமய அற நிலையத்துறையின் ஆணையர் ஜெயாவுக்கு புகார் மனு ஒன்றை அனுப்பி உள்ளார்.

சிலை மாற்றப்பட்ட விவகாரம் வெளிச்சத்திற்கு வந்து விட்ட பின்னரும், காவல்துறையில் புகார் அளிக்காமல் அதனை மறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. கோவிலில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட அந்த பழமையான மயில் சிலையை, 15 தினங்கள் கழித்து மீண்டும் சிசிடிவி இணைப்பை துண்டித்து யாருக்கும் தெரியாமல் கோவிலுக்குள் இரவோடு இரவாக கொண்டு வரப்பட்டு அங்கேயே நிர்மாணிக்கப்பட்டுள்ளது. சிலையை எடுத்து சென்றபோது மயிலின் தலை உடைந்து சேதமடைந்ததாகவும் கூறப்படுகின்றது.

இதனை மறைக்க சிலையில் மேல் வெள்ளை துணி போட்டு மூடி வைத்திருந்துள்ளனர். இந்த சம்பவம் நடந்து 10 மாதங்கள் கழித்து துறை ரீதியான விசாரணை என்ற பெயரில் விசாரணைக்கு சென்ற அதிகாரி திருமகள் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தாமல், சட்ட விதிகளின் படி நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரைத்துள்ளார்.

அதன்பின்னரும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத நிலையில், அண்மையில் சிலைகடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேலுவிடம் திருச்செந்தூர் கோவிலின் இணை ஆணையர் பாரதி என்பவர், சிலை மாற்றப்பட்ட விவகாரத்தை விரிவான புகாராக தெரிவித்திருந்தார்.

இந்த புகார் குறித்து விசாரித்த சிலைகடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினரின் அறிவுறுத்தலின் பேரில், மயில் சிலை மாற்றப்பட்ட சம்பவத்தில், கோவிலின் முன்னாள் இணை ஆணையர் பரஞ்ஜோதி, சூப்பிரண்டு பத்மனாபன், திருமேனி காவல் பணியாளர்கள் சுரேஷ், ராஜா, குமார், சுவாமிநாதன் ஆகிய 6 பேர் மீது திருச்செந்தூர் கோவில் காவல் நிலையத்தில் குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த பழமையான மயில் சிலை ஏன் மாற்றப்பட்டது என்பதற்கு கோவிலில் உள்ள சிலர் கூறிய காரணங்கள் சற்று வினோதமானது என்று கூறப்படுகின்றது, பராமரிப்பு பணியின் போது மயில் சிலையின் தலை சேதமானதாகவும், அதன் பின்னர் கோவிலின் சுற்றுபிரகாரம் இடிந்து ஒருவர் இறந்து போனதாகவும் இது கோவிலுக்கு அபசகுணம் என்பதால் அந்த மயில் சிலையை அகற்றிவிட்டு புதிய சிலையை வைத்ததாக கூறி உள்ளனர்.

உண்மையில், அந்த மயில் சிலை பாதுகாப்பாக கம்பி கூண்டுக்குள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அதனை மாற்றி எடுத்து செல்ல மேற்கொண்ட முயற்சியில் சேதப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் அல்லது எடுத்து சென்றபோது சேதம் அடைந்திருக்க வேண்டும் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

மயில் சிலை கடத்தலை மறைக்க முயன்றதோடு நடவடிக்கை எடுக்காமலும், புகார் அளிக்காமலும் மறைத்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com