

திருச்சுழி,
திருச்சுழி அருகே கீழ்குடி செங்குளம் பகுதியை சேர்ந்தவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாளையொட்டி பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்தி விட்டு திரும்பினர். அவர்கள் பரளச்சி அருகே வாகனத்தில் வந்தபோது கோஷமிட்டுகொண்டே வந்ததால், மற்றொரு தரப்பினர் வாகனத்தின் மீது கல்வீசி தாத்குதல் நடத்தினர்.
இதனால் வாகனத்தில் வந்தவர்களுக்கும் மற்றொரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் கலவரக்காரர்களை கட்டுப்படுத்த வானத்தை நோக்கி 2 முறை துப்பாக்கி சூடு நடத்தி விரட்டி அடித்தனர்.
இதையடுத்து இரவு இரு தரப்பு கிராம மக்களுக்கிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை நிலவியதால், சம்பவ இடத்திற்கு தென் மண்டல ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன், மதுரை சரக டி.ஐ.ஜி.ஆனிவிஜயா, விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெருமாள் நேரில் வந்து ஆய்வு செய்தனர்.
இதுதொடர்பாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். சம்பவம் தொடர்பாக கீழப்பூலாங்காலை சேர்ந்த சக்தி (வயது 38) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் பரளச்சியை சேர்ந்த பசுபதிபாண்டியன், ஆனந்தகுமார், சுமதி, காளிஸ், நாகஜோதி உள்ளிட்ட பலர் மீது கொலை முயற்சி வழக்கு உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நரிக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சசு கொடுத்த புகாரின் பேரில், கீழப்பூலாங்கால் மற்றும் செங்குளத்தை சேர்ந்த 30 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இதுவரை 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலரை தேடி வருகின்றனர்.