நெல்லையில் கொரோனாவுக்கு தொழில் அதிபர் பலி - தூத்துக்குடி-தென்காசியில் 82 பேருக்கு தொற்று

நெல்லையில் கொரோனாவுக்கு தொழில் அதிபர் ஒருவர் நேற்று பலியானார். தூத்துக்குடி, தென்காசியில் 82 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
நெல்லையில் கொரோனாவுக்கு தொழில் அதிபர் பலி - தூத்துக்குடி-தென்காசியில் 82 பேருக்கு தொற்று
Published on

நெல்லை,

நெல்லை மாவட்டத்துக்கு வெளிமாநிலம் மற்றும் வெளியூர்களில் இருந்து வருபவர்களால் கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாகி வருகிறது. நேற்று முன்தினம் நிலவரப்படி கொரோனா தொற்றால் 640 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 442 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 198 பேர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில், நெல்லை மாநகர பகுதியை சேர்ந்த 4 பேரும், புறநகர் பகுதியை சேர்ந்த ஒருவரும் அடங்குவர்.

இதற்கிடையே கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நெல்லை டவுன் கோடீஸ்வரன் நகரை சேர்ந்த 61 வயதுடைய தொழிலதிபர் நேற்று பரிதாபமாக இறந்தார். இவர், வாடகை லாரி புக்கிங் அலுவலகம் நடத்தி வந்தார். மேலும், லாரி உரிமையாளர் சங்க நிர்வாகியாகவும் பொறுப்பு வகித்து வந்தார். அவர் சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.

கடந்த 17-ந் தேதி அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதையொட்டி நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று காலை பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து தொழில் அதிபரின் வீட்டில் உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அந்த பகுதியில் சுகாதாரப்பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.

நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு ஏற்கனவே 4 பேர் உயிரிழந்துள்ளர். தற்போது பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்து உள்ளது. அதேபோல் நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 645 ஆக உயர்ந்தது.

தூத்துக்குடியில் 62 பேருக்கு தொற்று

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு வந்தவர்களுக்கு நடந்த கொரோனா பரிசோதனையில் பலருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 577 ஆக இருந்தது. நேற்று ஒரே நாளில் 62 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 639 ஆக அதிகரித்தது. இதில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியை சேர்ந்த 16 பேரும், காயல்பட்டினம், தருவைக்குளம், அய்யனார்குளம்பட்டி, மாப்பிள்ளையூரணி வெற்றிநகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 241 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். நேற்று ஒரே நாளில் 20 தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் வாசுதேவநல்லூரை சேர்ந்த 10 பேர், செங்கோட்டையை சேர்ந்த 2 பேர், தென்காசியை சேர்ந்த 2 பேர், கடையநல்லூரை சேர்ந்த 2 பேர், சங்கரன்கோவில், இலத்தூர், கடையத்தை சேர்ந்த தலா ஒருவரும் அடங்குவர்.

தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 261 ஆக உயர்ந்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com