நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பலத்த மழை: சாலையில் குளம் போல் தேங்கிய தண்ணீர் முனைஞ்சிப்பட்டியில் மரம் சரிந்து போக்குவரத்து பாதிப்பு

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது.
Published on

தென்காசி,

நெல்லை, தென்காசி மாவட்ட பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கோடை வெயில் கொளுத்தி வந்தது. இதனால் பகலில் மட்டுமின்றி இரவிலும் புழுக்கத்தால் மக்கள் தவித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 18-ந்தேதி லேசான மழை பெய்தது. அதன் பிறகு வெயில் அடித்தது. நேற்று காலை முதல் மதியம் 2 மணி வரை வெயில் கொளுத்தியது.

இந்த நிலையில் நெல்லை சந்திப்பு, தச்சநல்லூர், டவுன் பகுதியில் 2.15 மணிக்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. 2.30 மணிக்கு நெல்லை சந்திப்பு, டவுன் உள்ளிட்ட சில இடங்களில் நல்ல மழை பெய்தது. நெல்லை சந்திப்பில் 30 நிமிடம் மழை பெய்தது. இதனால் வெப்பம் ஓரளவு தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி கிடந்தது. பஸ்நிலைய வேலை நடப்பதால் அந்த பகுதியில் சேறும் சகதியுமாக காட்சி அளித்தது. இதனால் வாகனங்கள் பெரிதும் அவதி அடைந்தனர்.

நெல்லை டவுன் வடக்கு ரதவீதியில் மழைநீர் குளம்போல் தேங்கி கிடந்தது. சந்திப்பு மேம்பாலத்திற்கு கீழ் பகுதியிலும், போலீஸ் நிலையம் முன்பும் மழைநீர் தேங்கியது. நேற்று மதிய நிலவரப்படி பாளையங்கோட்டையில் 34 மில்லிமீட்டர் மழையும், நெல்லையில் 22 மில்லி மீட்டர் மழையும் பெய்தது. நெல்லை டவுன், பாளையங்கோட்டை, பேட்டை, சுத்தமல்லி பகுதியில் 45 நிமிடம் கன மழை பெய்தது. இதனால் மழைநீர் ஆங்காங்கே குளம் போல் தேங்கியது. அம்பை, பாபநாசத்தில் லேசான மழை பெய்தது. மணிமுத்தாறு பகுதியில் நேற்று மதியம் 7.8 மில்லி மீட்டர் மழை பெய்தது.

மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள முனைஞ்சிப்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மதியம் இடி, காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் முனைஞ்சிப்பட்டியில் இருந்து வடக்கு விஜயநாராயணம் செல்லும் சாலையில் சுமார் 70 ஆண்டுகள் பழமையான ஆலமரம் வேருடன் சரிந்து சாலையில் விழுந்தது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மூலைக்கரைப்பட்டி போலீசார் மற்றும் ஊர் பொதுமக்கள் சேர்ந்து மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

தென்காசி மாவட்டம் கடையத்தில் நேற்று மதியம் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சில பகுதிகளில் மின்வயர்கள் அறுந்து மின்தடை ஏற்பட்டது. மின்வாரிய ஊழியர்கள் வந்து மின்தடையை சரிசெய்தனர். இதேபோல் ஆய்குடி, சுரண்டை பகுதியிலும் பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியானதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பனவடலிசத்திரம் பகுதிகளான மேலநரிக்குடி, கீழநரிக்குடி, அச்சம்பட்டி, கருப்பனூத்து, தடியம்பட்டி, கூவாச்சிபட்டி, பனவடலிசத்திரம், தெற்குபனவடலி, வடக்குபனவடலி, மருக்காலங்குளம் ஆகிய ஊர்களிலும் மழை பெய்தது.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு மில்லிமிட்டரில் வருமாறு:-

பாளையங்கோட்டை- 33, நெல்லை- 22, பாபநாசம்- 12, நாங்குநேரி- 31, மணிமுத்தாறு- 7.8, ஆய்குடி- 7, ராமநதி- 5, கடனாநதி- 5.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com