நெல்லையில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திடீர் ரத்து - பெட்டியில் மனுக்களை போட்டுச் சென்ற மக்கள்

நெல்லையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று திடீரென்று ரத்து செய்யப்பட்டது. இதனால் அங்கு வைக்கப்பட்டிருந்த பெட்டியில் பொதுமக்கள் மனுவை போட்டுச் சென்றனர்.
நெல்லையில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திடீர் ரத்து - பெட்டியில் மனுக்களை போட்டுச் சென்ற மக்கள்
Published on

நெல்லை,

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெறும். இந்த கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொள்வார்கள். நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

அப்போது காலை 10 மணி அளவில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானது. இதையடுத்து மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கை மனுக்களை போடுவதற்காக, கலெக்டர் அலுவலகத்தில் ஒரு பெட்டி வைக்கப்பட்டது. அந்த பெட்டியில் ஏராளமான பொதுமக்கள் மனுக்களை போட்டுச் சென்றனர்.

நெல்லை பாலாமடை பஞ்சாயத்து காட்டாம்புளி அருகே உள்ள இந்திராநகர் மக்கள், கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து, இந்திராநகர் பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஒதுக்கிவைக்கப்பட்டுள்ள இடத்தில் யாருக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கூடாது என்று கூறி அந்த மனுவை பெட்டியில் போட்டுச் சென்றனர்.

திருநெல்வேலி தாலுகா உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள், தலைவர் முருகன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள் தாமிரபரணி ஆற்று வெள்ளத்தில் காணாமல் போன மற்றும் அறுந்து போன வலைகளுக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என்று கூறி மனுவை பெட்டியில் போட்டனர்.

வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த வலியுறுத்தி நாம் இந்துக்கள் கட்சியினர் கழுத்தில் வெங்காய மாலை அணிந்து வந்து மனுவை பெட்டியில் போட்டு சென்றனர்.

நெல்லை கொக்கிரகுளத்தில் குடியிருப்பு பகுதியில் உள்ள செல்போன் உயர்மட்ட கோபுரத்தை அகற்ற வேண்டும் என்று கூறி நெல்லை மருதம் மக்கள் நலச்சங்கத்தினர் மனுவை பெட்டியில் போட்டு சென்றனர்.

பாளையங்கோட்டை தியாகராஜநகரை சேர்ந்த சண்முகம் என்பவர் தனது குடும்பத்தோடு கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். நெல்லையை சேர்ந்த டாக்டர் ஒருவர் தன்னிடம் கந்துவட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி மனுவை பெட்டியில் போட்டு சென்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com