நெல்லை,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு படிப்படியாக தளர்த்தப்பட்டு உள்ளது. நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள் உள்ளிட்டவைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளன. மேலும் கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முக கவசம் அணிந்தும், கைகளை சுத்தம் செய்த பின்னர் கடைகளுக்கு செல்ல வேண்டும் என அரசு விதிமுறை விதித்துள்ளது.
இந்த விதிமுறைகளை கடைகள், தனியார் நிறுவனங்கள் மீறுவதாக நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணனுக்கு புகார் வந்தது. இதையடுத்து நெல்லை மாநகர பகுதியில் உள்ள கடைகளை ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். நெல்லை மண்டல பகுதியில் உதவி ஆணையாளர் சொர்ணலதா தலைமையிலும், பாளையங்கோட்டை மண்டல பகுதியில் உதவி ஆணையாளர் பிரேம்ஆனந்த் தலைமையிலும், தச்சநல்லூர் மண்டலத்தில் அய்யப்பன் தலைமையிலும், மேலப்பாளையம் மண்டல பகுதியில் உதவி ஆணையாளர் பிரேமசுகிலதா தலைமையிலும் நேற்று அதிரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
10 கடைகளுக்கு சீல்
இந்த குழுவில் சுகாதார அலுவலர் அரசகுமார், சுகாதார ஆய்வாளர்கள் சாகுல்அமீது, முருகேசன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்டவர்கள் இடம் பெற்று இருந்தனர். நெல்லை டவுனில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத ஒரு சூப்பர் மார்க்கெட், நகைக்கடைகள், செல்போன் கடைகள் என மொத்தம் 5 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. அதேபோல் மேலப்பாளையம் மண்டலத்தில் 3 கடைகளிலும், பாளையங்கோட்டை மண்டலத்தில் 2 கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது. மொத்தம் 10 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன.
மேலும் முக கவசம் அணியாத கடை உரிமையாளர்கள், பணியாளர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. ஒருவருக்கு ரூ.100 வீதம் மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர். மொத்தம் ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.