ஆட்டிறைச்சி கடை நடத்த அனுமதி கோரி திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வியாபாரிகள் மனு

ஆட்டிறைச்சி கடை நடத்த அனுமதி கோரி திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து முற்றுகையிட்டு சங்க தலைவர் அப்துல்ஜமில் தலைமையில் கலெக்டர் சிவன்அருளிடம் மனு அளித்தனர்.
Published on

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் ஆட்டிறைச்சி விற்பனையாளர்கள் மற்றும் மாட்டிறைச்சி விற்பனையாளர்கள் சங்கம் ஆகியவை சார்பில் 100-க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து முற்றுகையிட்டு சங்க தலைவர் அப்துல்ஜமில் தலைமையில் கலெக்டர் சிவன்அருளிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில், ஆட்டிறைச்சி விற்பனையாளர்கள் கொரோனா ஊரடங்கில் இருந்து கடைகளை திறக்காததால் குடும்பத்தை நடத்த சிரமப்பட்டு வருகின்றனர். பலர் கடன் கட்ட முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், மாணவ-மாணவிகளுக்கு கல்வி கட்டணம் கட்ட வேண்டும். மருத்துவக் கட்டணம் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு மீண்டும் எங்களுக்குக் கடைகளை திறக்க அனுமதி அளிக்க வேண்டும், எனத் தெரிவித்துள்ளனர். அதற்கு கலெக்டர் சிவன்அருள் கூறியதாவது.

ஆட்டிறைச்சி வெட்டும் இடம் தனியாக இருக்க வேண்டும், இறைச்சி விற்பனை செய்யும் இடத்தில் பாதுகாப்பாக சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும். இறைச்சி வாங்க வருவோரின் கைகளில் சானிடைசரை தடவ ஏற்பாடு செய்ய வேண்டும். இறைச்சி விற்பனை செய்வோர், வாங்க வருவோர் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும்.

திறந்த வெளியில் ஆட்டிறைச்சியை தொங்க விடுவதால் நோய் தொற்று பரவ வாய்ப்புள்ளது. எனவே அதை பாதுகாப்பாக கண்ணாடி அறையில் வைத்து பொதுமக்களுக்கு விற்க வேண்டும். அப்படி செய்தால் விரைவில் அனுமதி வழங்கப்படும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.

அப்போது ஞானசேகரன், அல்தாப், இர்பான் உள்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com