சென்னை,
உலக எம்.ஜி.ஆர். பேரவையின் தலைவரும், பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயருமான சைதை துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயரை சூட்டியதை அடுத்தவர்களின் குழந்தைக்கு அவர் பெயர் வைக்க ஆசைப்படுகிறார் தமிழக முதல்-அமைச்சர் என்று மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்தது கடும் கண்டனத்துக்குரியது. கோயம்பேடு பஸ் நிலையத்தின் வரலாறு தெரியாமல் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
கோயம்பேடு பஸ் நிலையம் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி மானியக்கோரிக்கை (33 மற்றும் 34 - பக்கம் 27) 1986-87-ம் ஆண்டுகளில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தால் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முக்கிய அம்சங்களான, கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி, புறநகர் பஸ் நிலையம் மற்றும் சுமைவண்டி நிலையங்கள், இரும்பு மொத்த விற்பனை அங்காடிகள் - சாத்தாங்காடு, மணலி புதுநகரம், மறைமலைநகர் புது நகரம் இவை அனைத்தும் எம்.ஜி.ஆரின் ஆணையின்படி, அன்றைய வீட்டுவசதி துறை அமைச்சர் திருச்சி நல்லுசாமியால் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்கள் ஆகும்.
1985-86-ம் ஆண்டுகளில் சென்னை பெருநகர மேம்பாட்டுக்குழு உறுப்பினராக என்னை (சைதை துரைசாமி) எம்.ஜி.ஆர். நியமனம் செய்தார். அவர் தலைமையில் கூட்டப்பட்ட அந்த கூட்டத்தில் தான், இந்த திட்டத்தினுடைய அவசியத்தை நான் வலியுறுத்தி, சென்னையில் எந்தெந்த பகுதிகளில் மாற்றங்கள் கொண்டுவரவேண்டும் என்று மனுவாக கொடுத்தேன். அதில் பிராட்வேயில் உள்ள பூக்கடை பஸ் நிலையம் மற்றும் அந்த பகுதியில் இருக்கும் கொத்தவால்சாவடிக்கு அண்ணா சாலை வழியாக அனைத்து பஸ்களும் செல்வதால் மிகவும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு புறநகரில் பஸ் நிலையம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தேன். மேலும் இதுகுறித்து சட்டமன்றத்திலும் நேரடியாக முதல்-அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரிடம் எடுத்துச்சொன்னேன். எம்.ஜி.ஆர். உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்போது வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த நல்லுசாமிக்கு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் தான் 1986-87-ம் ஆண்டு முதன் முதலில் இதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டது.
கோயம்பேடு பஸ் நிலையம் அமைப்பதற்கு தேவையான நிலத்துக்கு அன்றைக்கு குறிப்பாக 230 ஏக்கர் பரப்பளவில் நிலத்தை கையகப்படுத்துவதற்கும், 3 ஆயிரம் கடைகள் அமைப்பதற்கும், பஸ் நிலையம் அமைப்பதற்கும் முடிவு எடுத்தவர் எம்.ஜி.ஆர். தான். கோயம்பேடு பஸ் நிலையம் உருவாவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டவர் எம்.ஜி.ஆர். என்பதை மு.க.ஸ்டாலின் தெரிந்திருக்கவில்லை. அப்படி தெரிந்திருந்தால் இது யார் குழந்தை என்ற உண்மை அவருக்கு விளங்கியிருக்கும்.
சட்டமன்ற உறுப்பினர், மேயர், உள்ளாட்சித்துறை அமைச்சர், துணை முதல்-அமைச்சர், இன்றைய எதிர்க்கட்சி தலைவர் போன்ற இத்தனை பதவிகளை வகித்தவருக்கு இந்த உண்மைகள் எல்லாம் தெரியாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது. கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு எம்.ஜி.ஆரின் பெயரை வைத்ததற்கு குறைகூறி அவர் சொன்ன உதாரணம் கடுமையான கண்டனத்துக்குரியது.
எம்.ஜி.ஆரால் தான் கருணாநிதி முதல்-அமைச்சர் ஆனார் என்பதை மறந்துவிடாதீர்கள். அன்றைக்கு உங்களுடைய குடும்பம் கடனில் தத்தளித்தபோது கடுமையான சோதனைக்கு ஆளான நேரத்தில் எங்கள் தங்கம் திரைப்படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்து கொடுத்து, உங்கள் குடும்பத்தை காப்பாற்றியவர் எம்.ஜி.ஆர். கடன் தொல்லையால் அவதிப்பட்ட நேரத்தில் உங்களுக்கு உதவி செய்தவர் எம்.ஜி.ஆர். என்று மாறனாலும், கருணாநிதியாலும் நன்றி உணர்ச்சியுடன் அந்த மேடையிலேயே திராவிட கர்ணன் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். என்று உங்களுடைய அப்பா கருணாநிதியாலே பாராட்டப்பட்டவர்.
தென்னாடும் தென்னவரும் உள்ளவரை மன்னா உன் திருநாமம் துலங்கவேண்டும். உன்னாலே உயர்வடைந்த என் போன்றோர் உள்ளங்கள் அதை கண்டு மகிழவேண்டும் என்று உங்கள் தந்தை கருணாநிதியே போற்றி பாராட்டியுள்ளார். மேற்கண்ட இரண்டு காரணங்களுக்காகவே எம்.ஜி.ஆர். பெயரை கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு வைத்ததை நீங்கள் விமர்சித்திருக்கக்கூடாது.