கொரோனாவை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை “ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் குடும்பத்தினர் அனைவரும் முகாமுக்கு அனுப்பப்படுவார்கள்” என்று எச்சரிக்கை

சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,072 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, கொரோனாவை கட்டுப்படுத்த சில அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.
Published on

சென்னை,

தமிழகத்தில் நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்ட 1,384 பேரில் 1,072 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். செங்கல்பட்டு மாவட்டத்தில் 169 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 44 பேருக்கும், காஞ்சீபுரம் மாவட்டத்தில்டி 8 பேருக்கும் நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 693 ஆக உயர்ந்து இருக்கிறது.

சென்னையில் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 2 ஐ.பி.எஸ். அதிகாரிகளும் அடங்குவார்கள். டி.ஜி.பி. அலுவலகத்தில் பணிபுரியும் ஐ.பி.எஸ். அதிகாரியான ஒரு போலீஸ் சூப்பிரண்டு மற்றும் 2 துணை போலீஸ் சூப்பிரண்டு களுக்கு நேற்று தொற்று உறுதியானது. இதன் மூலம் டி.ஜி.பி. அலுவலகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25 ஆக உயர்ந்தது.

இது தவிர சென்னை மாநகர போலீசில் துணை கமிஷனராக பணியுரியும் ஐ.பி.எஸ். அதிகாரி உள்பட புதிதாக 8 பேர் நேற்று பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் சென்னை போலீசில் பாதிப்பு எண்ணிக்கை 394 ஆக உயர்ந்தது.

தமிழகம் முழுவதும் நேற்று கொரோனாவுக்கு 12 பேர் பலி ஆனார்கள். இவர்களில் 10 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். ஒருவர் புதுக்கோட்டை மாவட்டத்தையும், மற்றொருவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும், சென்னை நகரில் மக்கள் நெருக்கம் அதிகம் என்பதால் கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு போதிய பலன் கிடைப்பது இல்லை. கட்டுப்பாடுகளை மக்கள் சரிவர பின்பற்றாததும் கொரோனா வேகமாக பரவுவதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, நகரில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து உள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் சிறப்பு அதிகாரி டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.

இந்த கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ், போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் கலந்துகொண்டனர்.

கூட்டம் முடிந்தவுடன் டாக்டர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னை மாநகராட்சி கமிஷனர் தலைமையிலான குழுக்களுடன், சுகாதாரத்துறையில் இருந்து 779 பேர் முகாம்களில் பணியமர்த்தப்பட்டு, சளி, காய்ச்சல் அறிகுறி இருப்பவர்களை கண்டறிந்து பரிசோதனை செய்கின்றனர். சென்னையில் நாள் ஒன்றுக்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.

இவ்வாறு கொரோனா அறிகுறி இருப்பவர்களை தேடிச் சென்று, அவர்களை கண்டுபிடித்து தனிமைப்படுத்தினால் தான் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும். இதுபோன்ற பரிசோதனை எண்ணிக்கை அதிகரிப்பால்தான், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகமாக வருகிறது. இந்த எண்ணிக்கையை வைத்து பொதுமக்கள் பயப்பட வேண்டாம்.

முககவசம் அணியாமல் வெளியே வந்து மற்றவர்களுக்கு நோய் பரப்பும் நடவடிக்கை மேற்கொள்பவர்கள், விதி மீறுபவர்களை தனிமைப்படுத்தப்படுவது மட்டுமல்லாமல் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதி என்று அறிவிக்கப்பட்டால், அந்த பகுதியில் உள்ள மக்கள் வெளியே வராமல் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். தனிமைப்படுத்தி கொள்ளாதவர்கள், தனிமைப்படுத்தும் மையங்களில் அடைக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் கூறியதாவது:-
சென்னையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வசதி இல்லாதவர்கள் அரசு மையங்களுக்கு அனுப்பப்படுகின்றனர்.

இனி குடும்பத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், குடும்பத்தினர் அனைவரும் தனிமைப்படுத்தும் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே நடமாடினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கோ.பிரகாஷ் கூறினார்.

போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கூறும்போது, சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட போலீசார் 140 பேர் இதுவரை குணம் அடைந்து பணிக்கு திரும்பி உள்ளனர் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com