வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக பஸ் நிலையங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்

வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக பஸ் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
Published on

கிருஷ்ணகிரி,

தமிழ்நாட்டில் நாடாளுமன்றத்திற்கும், 18 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நேற்று நடந்தது. இந்த தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதற்காக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தது. இந்த தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க வசதியாக பல்வேறு நிறுவனங்கள் விடுமுறை விட்டிருந்தன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, சூளகிரி, ஓசூர் உள்பட பல்வேறு இடங்களில் வெளி மாவட்டங்களை சேர்ந்த பலரும் தொழில் நிமித்தமாக குடியேறி உள்ளனர். அவர்கள் ஓட்டு சொந்த ஊர்களில் இருப்பதால் அவர்கள் வாக்களிப்பதற்காக தங்களின் சொந்த ஊர்களுக்கு கடந்த 2 நாட்களாக சென்ற வண்ணம் இருந்தனர்.

அந்த வகையில் கிருஷ்ணகிரி, ஓசூர், சூளகிரி பகுதியில் இருந்து தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிப்பதற்காக பஸ்களில் செல்ல பஸ் நிலையத்திற்கு ஆயிரக்கணக்கான பயணிகள் வந்திருந்தனர். இதனால் பஸ் நிலையங்கள் முழுவதும் பயணிகள் கூட்டமாக காணப்பட்டது.

குறிப்பாக வேலூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் திருவண்ணாமலை, சேலம் சுற்று வட்டார பகுதிகளுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வாக்களிக்க புறப்பட்டு சென்றனர். இதன் காரணமாக பஸ்களில் படிகளில் நின்றபடியும், தொங்கியபடியும் பயணம் செய்தனர்.

இதற்கிடையே ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரிக்கும், பிற ஊர்களுக்கு செல்ல ஏராளமான பயணிகள் காத்திருந்தனர். ஆனால் போதிய அளவு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். ஒரு கட்டத்தில் பயணிகள் சாலை முன்பு திரண்டு அங்கு நின்ற அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை அதிகாரிகள் சமரசம் செய்து, கூடுதலாக பஸ்களை வரவழைத்து அனுப்பி வைத்தனர்.

மேலும் சூளகிரி நகருக்குள் கிருஷ்ணகிரி செல்லும் பஸ்கள் சிறிது நேரம் வரவில்லை. இதனால் நூற்றுக்கணக்கான பயணிகள் அங்கிருந்து கிருஷ்ணகிரி செல்ல முடியாமல் தவித்தனர். ஒரு கட்டத்தில் பஸ் நிலையத்திற்குள் வந்த பிற பஸ்களை பயணிகள் சிறைபிடித்தனர். இதையடுத்து போலீசார் அங்கு சென்று சமாதானப்படுத்தினார்கள். பிறகு நீண்ட நேரத்திற்கு பிறகு பஸ்கள் சூளகிரி வந்து பயணிகளை ஏற்றி கிருஷ்ணகிரிக்கு சென்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com