டெல்லியில் இருந்து திரும்பிய ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு உற்சாக வரவேற்பு ‘பா.ஜனதா சேர்த்துக்கொண்டது என் பாக்கியம்’ என பேட்டி

டெல்லியில் இருந்து திரும்பிய ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு போபாலில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, பா.ஜனதா என்னை சேர்த்துக்கொண்டது நான் செய்த பாக்கியம் என்று அவர் தெரிவித்தார்.
Published on

போபால்,

காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்த மத்தியபிரதேச முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா மாநிலங்களவை எம்.பி. வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக தலைநகர் டெல்லியில் இருந்து போபாலுக்கு நேற்று பிற்பகல் சென்றார்.

மத்திய மந்திரியும், பா.ஜனதா தலைவருமான நரேந்திர சிங் தோமருடன் தனி விமானத்தில் சென்ற சிந்தியாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

விமான நிலையத்தில் இருந்து போபாலில் உள்ள பா.ஜனதா கட்சி அலுவலகம் வரை 15 கி.மீ. தூரத்திற்கு சிந்தியா பேரணியாக அழைத்து வரப்பட்டார். அப்போது சாலையின் இருபுறமும் பா.ஜ.க. கொடிகளும், வரவேற்பு பேனர்களும் வைக்கப்பட்டிருந்தன. பெண்கள் காவி நிற சேலை அணிந்து, மலர் தூவி அவரை வரவேற்றனர். சிலர் பட்டாசுகள் வெடித்து சிந்தியா பா.ஜ.க.வில் இணைந்ததை வரவேற்றனர்.

அதனைத்தொடர்ந்து தலைவர்களின் சிலைகள், உருவப்படங்களுக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர், சிந்தியா நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் செய்த பாக்கியம்

பா.ஜனதா என்னை சேர்த்துக்கொண்டது நான் செய்த பாக்கியம். பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பிரதமர் நரேந்திரமோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் எனக்காக கட்சியின் கதவை திறந்துள்ளனர். கட்சியின் வளர்ச்சிக்காக கடினமாக உழைப்பேன். ஒரு நிறுவனத்துக்காக, குடும்பத்துக்காக (காங்கிரஸ்) 20 வருடங்களாக உழைத்தேன். ஆனால் என்னை வெளியேற்றி விட்டார்கள்.

இந்த நாள் எனக்கு மிகுந்த உணர்ச்சி மிகுந்த நாள். எனக்காக இந்த குடும்பம் (பா.ஜ.க.) கட்சி கதவை திறந்து வைத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேல்சபை எம்.பி. பதவிக்காக அவர் இன்று (வெள்ளிக்கிழமை) வேட்பு மனு தாக்கல் செய்வார் என்று தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com