காஷ்மீரில் கட்டுப்பாடுகளை நீக்க ஒரு வாரத்தில் பரிசீலிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

காஷ்மீரில் கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்குவது குறித்து ஒருவாரத்தில் பரிசீலிக்க வேண்டும் என மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.
காஷ்மீரில் கட்டுப்பாடுகளை நீக்க ஒரு வாரத்தில் பரிசீலிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
Published on

புதுடெல்லி,

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்டு 5-ந் தேதி ரத்து செய்தது. மேலும் மாநிலத்தையும் 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதனால் மாநிலத்தில் அசாதாரண சூழல் நிலவி வந்ததால், பாதுகாப்பு காரணங்களுக்காக இணையதளம் மற்றும் தொலைதொடர்பு போன்ற சேவைகள் ரத்து செய்யப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இதில் பல கட்டுப்பாடுகள் பின்னர் நீக்கப்பட்ட நிலையில், இணையதள சேவை இன்னும் வழங்கப்படாமல் உள்ளது. இதனால் மாணவர்கள், வர்த்தகர்கள், ஊடகத்தினர் என பல்வேறு பிரிவினரும் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

எனவே மாநிலத்தில் மீண்டும் இணையதள சேவையை வழங்க வேண்டும் என மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத், காஷ்மீர் டைம்ஸ் பத்திரிகை ஆசிரியர் அனுராதா பாசின் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

அதில், காஷ்மீரில் இணையம் மற்றும் தகவல் தொடர்பு சேவைகள் ரத்து செய்யப்பட்டு பத்திரிகை நிருபர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவர்கள் இடம் பெயர்வதே கடினமானதாக உள்ளது. எனவே பத்திரிகை சுதந்திரத்தை காக்கும் வகையிலும், பத்திரிகையாளர்கள் தங்கள் பணியை சுதந்திரமாக மேற்கொள்ளும் வகையிலும் இணையதளம் உள்ளிட்ட சேவைகளை வழங்க உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை நீதிபதிகள் என்.வி.ரமணா, ஆர்.சுபாஷ் ரெட்டி, பி.ஆர்.கவாய் ஆகியோர் விசாரித்து நேற்று தீர்ப்பு வழங்கினர். அதில் அவர்கள் கூறியதாவது:-

இணையதள சேவையை காலவரையின்றி முடக்குவது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது. தகவல் தொடர்பு, வணிகம் மற்றும் தொழில்களுக்காக இணையத்தை பயன்படுத்துவது ஒருவரின் அடிப்படை உரிமையாகும்.

பேச்சு மற்றும் வெளிப்பாட்டு சுதந்திரம் மட்டுமின்றி எந்த தொழிலையும் மேற்கொள்ளவும், வணிகம் அல்லது தொழிலை இணையத்தின் மூலம் பயன்படுத்துவதற்கும், ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசியல் சட்டப்பிரிவு 19-ல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பேச்சு, வெளிப்பாடு, இயக்கம் மற்றும் தனக்கான தொழிலை தேர்ந்தெடுத்தல் ஆகியவை அரசியல் சட்டப்பிரிவு 19-ன் கீழ் வருகிறது.

எனவே இணையதள சேவை முடக்கத்தை திரும்ப பெறுவது தொடர்பாக காஷ்மீர் அரசு உடனடியாக பரிசீலிக்க வேண்டும். இதுபோன்ற முடக்கங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே இருக்க முடியும். அதுவும் நீதித்துறை மறுபரிசீலனைக்கு உட்பட்டது.

இதைப்போல எதிர்ப்புக்குரலை வன்முறை ஏதும் இன்றி வெளிப்படுத்துவதும், குடிமக்களுக்கு வழங்கப்பட்ட உரிமையாகும். இந்த உரிமைக்கு எதிராக குற்ற நடைமுறை சட்டத்தின் 144-வது பிரிவின் கீழ் பிறப்பிக்கப்படும் தடை உத்தரவை, எதிர்ப்பு குரலை நசுக்கும் ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது. இந்த சட்டப்பிரிவை காலவரையறையின்றி பயன்படுத்த முடியாது.

சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து கடந்த ஐந்து மாதங்களில் காஷ்மீரில் அமல்படுத்தப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளையும் அரசாங்கம் பகிரங்கமாக வெளியிட வேண்டும். இந்த கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்குவது குறித்து ஒரு வாரத்தில் பரிசீலிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com