3 மாதங்களாக நிலவும் குடிநீர் பிரச்சினை, கலெக்டர் அலுவலகத்துக்கு காலி குடங்களுடன் வந்த கிராம மக்கள் - கடலூரில் பரபரப்பு

குடிநீர் வசதி செய்து தரக்கோரி கலெக்டர் அலுவலகத்துக்கு காலி குடங்களுடன் கிராம மக்கள் மனு கொடுக்க வந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
3 மாதங்களாக நிலவும் குடிநீர் பிரச்சினை, கலெக்டர் அலுவலகத்துக்கு காலி குடங்களுடன் வந்த கிராம மக்கள் - கடலூரில் பரபரப்பு
Published on

கடலூர்,

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலையில் நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில் பங்கேற்க நடு வீரப்பட்டு காலனியை சேர்ந்த கிராமமக்கள் காலிக்குடங்களுடன் வந்தனர். அப்போது கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே பாதுகாப்புக்காக நின்ற போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரித்ததில், தங்கள் பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினை குறித்து கலெக்டரிடம் முறையிட வந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து அவர்களில் 5 பேரை மட்டும் கலெக்டரை சந்திக்க அனுமதிப்பதாக போலீசார் தெரிவித்தனர். அதன்பேரில் 5 பேர் மட்டும் கலெக்டர் அன்புசெல்வனை சந்தித்து மனு கொடுத்தனர்.

பின்னர் இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:-

குமளங்குளம் ஊராட்சிக்குட்பட்ட நடுவீரப்பட்டு காலனியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி பழுதடைந்து அடிப்பகுதியில் ஓட்டை விழுந்துள்ளதால் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது. இதனால் கடந்த 3 மாதங்களாக குடிநீர் பிரச்சினை உள்ளது. அவசர தேவைக்காக சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீர் பிடித்து வர வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் தெருவிளக்குகளும் சரியாக எரிவது இல்லை. எங்கள் கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை வழங்கவில்லை. இறப்பு சான்றிதழ், ஈமச்சடங்கு பணம் ஆகியவையும் வழங்கப்படவில்லை. இந்த பிரச்சினைகள் குறித்து வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் 3 முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால்தான் கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க வந்தோம். எங்கள் கிராமத்துக்கு எந்த ஒரு உதவியும் செய்யாத ஊராட்சி எழுத்தரை பணி நீக்கம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

தமிழ்நாடு நாட்டு செங்கல் உற்பத்தியாளர்கள் சங்க கடலூர் மாவட்டம் சார்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சேகர் தலைமையில் செங்கல் சூளை உரிமையாளர்கள் மற்றும் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் கோஷம் எழுப்பியபடி கலெக்டரிடம் மனுகொடுக்க பேரணியாக வந்தனர். கலெக்டர் அலுவலகத்தின் நுழைவு வாயில் அருகே வந்தபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

பின்னர் நகர செயலாளர் மணிவண்ணன், நாட்டு செங்கல் உற்பத்தியாளர் சங்க கவுரவ தலைவர் அப்துல்ரஹீம், தலைவர் நெப்போலியன், செயலாளர் தமிழ்குமரன், பொருளாளர் ஜெயராஜ் உள்ளிட்ட முக்கிய நபர்கள் கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் மாவட்டத்தில் நாட்டு செங்கல் உற்பத்தியால் 100-க்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்களும், ஆயிரக்கணக்கான ஏழை தொழிலாளர்களும் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் முறையாக உரிமம் பெற கடந்த 2 ஆண்டுகளாக விண்ணப்பித்து வருகிறார்கள். ஆனால் மாவட்ட சுரங்கத்துறை பெரும்பாலான விண்ணப்பங்களை பரிசீலனை செய்வதே இல்லை. கடந்த சில நாட்களாக அதிகாரிகள் இந்த தொழிலுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இதனால் செங்கல் உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள் ளது. எனவே உரிய நடவடிக்கை எடுத்து விரைவாக உரிமம் வழங்கி இந்த தொழிலை பாதுகாக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

அதேபோல் காட்டு நாயக்கன் சமூக சீர்திருத்த சங்க கிளை செயலாளர் கோவிந்தசாமி தலைமையில் பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், சிதம்பரம் கோட்டத்தில் இலவச கறவை மாடுகள் கேட்டு காட்டுநாயக்கன் சமூகத்தை சேர்ந்த 50 பேர் விண்ணப்பித்து இருந்தோம். ஆனால் எங்களுக்கு வழங்க வேண்டிய கறவை மாடுகளை வேறு ஒரு சமுதாயத்தை சேர்ந்த 50 பேருக்கு வழங்கி இருக்கிறார்கள். இது தொடர்பாக 3 முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே காட்டுநாயக்கன் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு கறவை மாடுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com