“பரிசு பெட்டகத்துக்கு அளிக்கும் வாக்கு எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் பாடம் புகட்டும்” திண்டுக்கல் பிரசாரத்தில் டி.டி.வி.தினகரன் பேச்சு

பரிசு பெட்டகத்துக்கு அளிக்கும் வாக்கு எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும் பாடம் புகட்டும் என்று திண்டுக்கல்லில் நடந்த பிரசாரத்தில் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேசினார்.
Published on

திண்டுக்கல்,

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் ஜோதிமுருகன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அந்த கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. நேற்று திண்டுக்கல்லில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலோடு, தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் தங்கத்துரை போட்டியிடுகிறார். அவர் நமது இயக்கத்துக்காக, துரோகிகளால் பதவியை இழந்தார். கெடுவான் கேடு நினைப்பான், தன்வினை தன்னை சுடும் என்பது போல் எடப்பாடி பழனிசாமி கம்பெனி உள்ளது. 18 தொகுதிகளின் இடைத்தேர்தலால் அவர்கள் நம்மிடம் வசமாக சிக்கி கொண்டார்கள்.

இந்த 18 தொகுதிகளில் 8 தொகுதிகளில் வெற்றிபெறாவிட்டால், ஆட்சியை விட்டுவிட்டு வீட்டுக்கு போகும் நிலை உருவாகி உள்ளது. தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் தலையெழுத்து, தமிழக மக்களிடம் தான் உள்ளது. தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் கூட்டணி மற்றும் தமிழகத்தை வஞ்சிக்கும் மோடியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். இதற்காக பரிசு பெட்டகத்துக்கு நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும் பாடம் புகட்டும்.

மெகா கூட்டணி என்கிறார்கள். அன்புமணி ராமதாஸ் கூறியது போன்று சொன்னால் அது மானங்கெட்ட கூட்டணி. ஜெயலலிதாவுக்கு எதிராக செயல்பட்டவர்கள், ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் கட்டுவதை எதிர்த்து நீதிமன்றம் சென்றவர்களுடன் கூட்டணி அமைத்துள்ளனர். ஆனால், கட்சி மற்றும் ஆட்சியை காப்பாற்றிய சசிகலா மற்றும் எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்களுக்கும் துரோகம் செய்துவிட்டனர்.

திண்டுக்கல்லுக்கும் பா.ம.க.வுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. எம்.ஜி.ஆருக்கு இரட்டை இலையை, திண்டுக்கல் மக்கள் பெற்றுத் தந்தனர். திண்டுக்கல் மக்கள் துரோகத்துக்கு துணை போகமாட்டார்கள். அதனால் கட்சி, ஆட்சி மற்றும் சின்னம் இருப்பதாக கூறுபவர்கள் திண்டுக்கல்லில் வேட்பாளரை நிறுத்த பயந்து, பா.ம.க.வுக்கு ஒதுக்கி உள்ளனர். இங்கு உள்ளவர்கள் நிலக்கோட்டையில் நிலக்கடலை உழுது கொண்டிருக்கிறார் கள். நிலக்கோட்டை மக்கள், ஆர்.கே.நகரை போன்று தர்மத்தின் பக்கம் நிற்பவர்கள்.

விவசாயிகள், மாணவர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள், வணிகர்கள் என அனைத்து தரப்பினரும் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையவும், தமிழகம் மீண்டும் தலைநிமிரவும் மக்கள் வாக்களிக்க வேண்டும். திண்டுக்கல் தொகுதியில் மருத்துவக்கல்லூரி, திண்டுக்கல்-சபரிமலை ரெயில் பாதை, திண்டுக்கல்-தேனி ரெயில் பாதை, முருங்கை பொருட்கள் தொழிற்சாலை உள்பட அனைத்து தேவைகளும் நிறைவேறுவதற்கு அ.ம.மு.க. வேட்பாளர் ஜோதிமுருகனுக்கு வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் ராமுத்தேவர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com