புதுச்சேரி அரசுக்கு கவர்னர் கிரண்பெடி பாராட்டு

புதுச்சேரி சட்டசபையில் உரையாற்றிய கவர்னர் கிரண்பெடி புதுவை அரசுக்கு பாராட்டு தெரிவித்தார்.
Published on

புதுச்சேரி,

புதுவை சட்டசபையில் கவர்னர் கிரண்பெடி நேற்று உரையாற்றினார். அவர் தனது உரையில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெறும் இந்த ஆட்சியை புதுச்சேரி மக்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்தில் தொடர்ந்து கவனம் செலுத்துவதுடன், சமூகத்தில் பின்தங்கிய மக்களின் நலனை பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

மத்திய அரசு முதல் முறையாக நல்லாட்சிக்கான குறியீட்டை கடந்த டிசம்பர் 25-ந் தேதி வெளியிட்டது. அதில் நமது புதுச்சேரி ஆட்சிப்பரப்புக்கு மனிதவள மேம்பாடு, பொது சுகாதாரம், நீதி மற்றும் சட்டம்-ஒழுங்கு என நான்கு துறைகளில் முதன்மை இடத்தை பிடித்தது மட்டுமல்லாமல் மொத்தமுள்ள 7 யூனியன் பிரதேசங்களில் முதன்மையான இடத்தை பிடித்துள்ளது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த சாதனைக்காக முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களையும், அரசு அதிகாரிகளையும் வாழ்த்துகிறேன்.

தொடர் கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் இந்த ஆட்சிப்பரப்பு முழுவதும் மத நல்லிணக்கம் தொடர்ந்து நிலவி வருகிறது. கொரோனா தொற்று பரவல் நமது பொருளாதாரத்திலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தொற்று பரவலை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த கடும் சோதனைகள் விரைவில் முடிவுக்கு வந்து இவ்வாட்சி பரப்பு கொரோனா பரவுவதில் இருந்து முழுவதுமாக விடுபடும். 2019-2020 ஆண்டின் மொத்த ஒதுக்கீடு ரூ.8,525 கோடியில் ரூ.7,927 கோடி அதாவது 93 சதவீதம் செலவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்துக்கு முன்னர் வரவேண்டிய சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டு தொகை ரூ.360 கோடி உரிய நேரத்தில் வராமல் போனது. இந்த செலவினம் குறைந்ததற்கு முக்கிய காரணம்.

2019-2020 ஆம் ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.37,943 கோடி என மதிப்பிடப்பட்டிருந்தது. இது கடந்த ஆண்டைவிட 10.95 சதவீதம் கூடுதலாகும். தனிநபர் வருமானம் ரூ. 2 லட்சத்து 20 ஆயிரத்து 208-ல் இருந்து ரூ.2 லட்சத்து 32 ஆயிரத்து 57 ஆக உயர்ந்துள்ளது. இது 5.3 சதவீத வளர்ச்சியை காட்டுகிறது. இவ்வாறு கவர்னர் உரையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com