கவர்னர் உரைக்கு ஆதரவும், எதிர்ப்பும்

கவர்னர் உரைக்கு அரசியல் கட்சிகள் இடையே ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளது.
Published on

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக சட்டப்பேரவையின் 2020-ம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றிய கவர்னர் பன்வாரிலால் புரோகித், தமிழகத்தில் வாழும் ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்; தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு பாதுகாக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு உத்தரவாதங்களையும், உறுதி மொழிகளையும் அளித்திருக்கிறார். இது வரவேற்கத்தக்கதாகும்.

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு மத்திய அரசினை வலியுறுத்தும். தமிழக மக்கள் எந்த மதத்தையோ, சமயத்தையோ பின்பற்றினாலும் அவர்கள் அனைவரின் நலனும் பாதுகாக்கப்படும் என கவர்னர் உரையில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்த சட்டம் காரணமாக ஈழத்தமிழர்களுக்கும், தமிழகத்திலுள்ள இஸ்லாமியர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று திட்டமிட்டு பொய் பிரசாரங்கள் செய்யப்படும் நிலையில், அவற்றை முறியடித்து உண்மை நிலையை உலகிற்கு விளக்கும் வகையில் கவர்னர் உரை அமைந்திருக்கிறது. ஈழத்தமிழருக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசுக்கு வலியுறுத்தும் வகையில், அது குறித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு சட்டமன்றத்தில் கவர்னர் உரையின் மூலம் எடப்பாடி பழனிசாமி அரசு தன்னைத்தானே பாராட்டிக்கொண்டு இருக்கிறது. ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை என்னும் திட்டத்தைத் தமிழ்நாட்டில் செயல்படுத்துவோம் என்று அறிவித்திருப்பது, பொது வினியோக முறையைச் சீர்குலைத்துவிடும். நடப்பு ஆண்டில் உணவு தானிய உற்பத்தி 115 மெட்ரிக் டன் என்ற அளவை எட்டும் என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், உணவு தானிய உற்பத்திக்கு அடித்தளமாக இருக்கும் விவசாயிகளின் பிரச்சினைகளை இந்த அரசு அலட்சியப்படுத்தி வருகிறது.

7 தமிழர்கள் விடுதலை குறித்து தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியும், அதனை நிராகரித்த கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு தமிழக சட்டமன்றத்தில் உரையாற்றும் தார்மீக உரிமை இருக்கிறதா? என்று எண்ணிப்பார்க்க வேண்டும். கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள் என்று தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிப்பதை கவர்னர் உரை முலாம் பூசி மறைக்கப்பார்க்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக சட்டமன்றத்தில் கவர்னர் ஆற்றிய உரையில் தமிழக வளர்ச்சிக்காக பல்வேறு துறைகளில் முக்கிய அம்சங்கள் இடம் பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது, பாராட்டுக்குரியது. மேகதாது திட்ட அறிக்கையை நிராகரிக்கவும், இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கவும், மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. இப்படி பல்வேறு முக்கிய அம்சங்கள் தமிழக மக்கள் நலன் காக்கும் வகையில் தமிழக கவர்னர் உரையில் இடம் பெற்றிருப்பதை த.மா.கா. சார்பில் வரவேற்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கவர்னர் அறிக்கையில் தமிழக மக்கள் எந்த ஒரு மதத்தையோ அல்லது சமயத்தையோ பின்பற்றினாலும் அவர்கள் அனைவரின் நலன்களும் பாதுகாக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வரும் மதரீதியான பாரபட்சமான குடியுரிமை திருத்தச்சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு ஆகிய விஷயங்களில் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்து விட்டு, அனைவரின் நலன்களை பாதுகாக்கப்போவதாக கூறுவது மக்களை ஏமாற்றுவதாக உள்ளது. மத்திய அரசின் மேற்கண்ட சட்டங்களுக்கு மாநில அரசு தனது ஆதரவினை வாபஸ் பெற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசின் கடன் அளவு உச்சம் தொட்டுள்ள நிலை குறித்து கவர்னர் உரையில் கவலைப்படவில்லை. அதிகரித்து வரும் வேலையில்லாதத் திண்டாட்டத்தை போக்க எந்தத் திட்டமும் இல்லை. மக்களை மத அடையாளப்படுத்தி பிளவுபடுத்தும் மத்திய அரசு, குடியுரிமை திருத்தச்சட்டத்தை நிறைவேற்ற ஆளும் கட்சி துணை போவது ஏன் என்பதை கவர்னர் உரை விளக்கவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆக்கப்பூர்வமான அறிவிப்புகள் எதுவும் இல்லாத மக்களுக்கு எந்தப்பயனும் தராத அறிவிப்புகளின் தொகுப்பாக கவர்னரின் உரை அமைந்திருக்கிறது. மக்களை மத ரீதியாகப் பிளவுபடுத்தும் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடியுரிமை பதிவேடு போன்ற மக்களின் உணர்வு மற்றும் உரிமை தொடர்பான பிரச்சினைகளில் அரசின் நிலைப்பாடு என்ன என்பது பற்றி எதுவும் கவர்னர் உரையில் இல்லை.

7 தமிழர் விடுதலை தொடர்பான தமிழக அமைச்சரவையின் பரிந்துரைக்கு பதிலேதும் சொல்லாமல் அதனை கிடப்பில் போட்டு விட்டது பற்றி கவர்னர் உரையில் எதுவுமே தெரிவிக்கப்படாததும் வருத்தமளிக்கிறது. மொத்தத்தில், ஆக்கப்பூர்வமான அறிவிப்புகள் எதுவுமின்றி எல்லாவற்றையும் பூசி மெழுகி பெயரளவுக்கு ஓர் உரையை கவர்னர் ஆற்றியிருக்கிறார் என்பதுதான் உண்மை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புதிய நீதிக்கட்சியின் நிறுவனர் ஏ.சி.சண்முகம் உள்பட பலர் கவர்னர் உரை குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com