மலைக்கோட்டை,
திருச்சி பெரியகடை வீதி அரபிக்குல தெருவை சேர்ந்தவர் மயில்வாகனன்(வயது 57). இவர், மலைக்கோட்டை சறுக்குப்பாறை ஆண்டாள் தெருவில் இரவு நேர டிபன் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் கடந்த 3 ஆண்டுக்கும் மேலாக, அந்த பகுதியை சேர்ந்த ஒரு பெண் வேலை பார்த்து வருகிறார். இவர் சாப்பிட வருபவர்களுக்கு இலை போடுவது, மேஜையை சுத்தம் செய்வது போன்ற வேலைகளை செய்து வந்தார். மயில்வாகனன் சமீபத்தில் வீடு ஒன்றை விற்பனை செய்தார். அதில் கிடைத்த பணத்தை அவர் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணிக்கு அந்த பெண், மயில்வாகனனிடம் செல்போனில் பேசினார். அப்போது, தன்னை வீடு புகுந்து சிலர் கடத்தி விட்டதாகவும், நீங்கள் ரூ.20 லட்சம் கொடுத்தால் தன்னை விடுவதாக கடத்தல் ஆசாமிகள் மிரட்டுவதாகவும், கூறினார். அப்போது உடன் இருந்த ஆசாமிகளில் ஒருவர், மயில்வாகனனிடம் ரூ.20 லட்சத்தை உடனடியாக எடுத்து வரவேண்டும், என்று பேசினார்.
இதனால், பதற்றமும் அதிர்ச்சியும் அடைந்த மயில்வாகனன் உடனடியாக கோட்டை போலீஸ் நிலையம் சென்று புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் சண்முகவேல், மயில்வாகனனுடன் அந்த பெண்ணுக்கு உள்ள நெருக்கத்தை பயன்படுத்தி கடத்தல் ஆசாமிகள் அந்த பெண்ணை கடத்தி சென்று ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டி இருக்கலாமோ? என்று விசாரித்து கொண்டிருந்தார்.
போலீஸ் நிலையத்தில் மயில்வாகனன் இருந்தபோது மீண்டும் அவருக்கு செல்போன் அழைப்பு வந்தது. அதை எடுத்து பேசியவரிடம், என்ன ரூ.20 லட்சம் எடுத்து வருகிறாயா? என்று எதிர்முனையில் பேசிய நபர் கேட்டார். உடனே தயக்கத்துடன் மயில்வாகனன், பணம் கொஞ்சம் குறைவாக உள்ளது. எனவே, ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க சென்று கொண்டிருக்கிறேன் என்றார். அப்போது எதிர்முனையில் பேசிய ஆசாமி, உன்னிடம்தான் அதிக அளவில் பணம் உள்ளதே?. பின்னர் எதற்காக ஏ.டி.எம். செல்வதாக பொய் சொல்கிறாய் என்று கேள்வி கேட்டுவிட்டு, உடனடியாக இணைப்பை துண்டித்து விட்டார்.
எனவே, மயில்வாகனனிடம் பணம் அதிகம் இருப்பதை நோட்டமிட்டுத்தான் பணம் பறிக்கும் நோக்கத்தில் அந்த பெண்ணை பகடைக்காயாக பயன்படுத்தி கும்பல் மிரட்டுவதாக போலீசார் சந்தேகித்தனர். மேலும் மயில்வாகனனுக்கு அழைப்பு வந்த செல்போன் எண்ணை ஆய்வு செய்து, எங்கிருந்து அழைப்பு வந்தது என்று போலீசார் விசாரித்தனர்.
இந்த நிலையில் சிறிது நேரம் கழித்து கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண் செல்போனில் பேசினார். அப்போது தன்னை கடத்திய கும்பல் திருச்சி கல்லணை ரோட்டில் சென்றபோது, காரின் கதவை திறந்து கொண்டு கீழே குதித்து தப்பித்து விட்டேன் என்றார். பின்னர் போலீசார் கல்லணை ரோட்டிற்கு சென்று, அங்கு நின்ற அந்த பெண்ணை மீட்டு போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர்.
மேலும் போலீசார் கல்லணை ரோட்டில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அந்த பெண் ஒரு காரில் இருந்து இறங்கி நடந்து வந்ததாகவும், காரில் இருந்து அவர் குதிக்கவில்லை என்பதும் தெரியவந்தது. அத்துடன் வீடு புகுந்து அவரை யாரும் கடத்தி சென்றதற்கான அறிகுறியும் அப்பகுதியில் தெரியவில்லை. எனவே, தனக்கு வேண்டிய சிலரை வைத்து கொண்டு, ஒரு காரை வாடகைக்கு அமர்த்தி டிபன்கடை உரிமையாளர் மயில்வாகனனிடம் இருக்கும் பணத்தை அபகரிக்கும் முயற்சியில் அந்த பெண் இந்த நாடகத்தை அரங்கேற்றியதும், போலீசாரிடம் மயில்வாகனன் சென்று விட்டதை அறிந்ததும் கடத்தல் நாடகத்தை கைவிட்டு தப்பிவிட்டதாக கூறியதும், தெரியவந்தது.
மேலும் அவரது நாடகத்துக்கு உடந்தையாக இருந்த நபர்கள் யார்? என்று, அந்த பெண்ணிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கடத்தல் நாடக சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.