கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பு வார்டு கலெக்டர் விஜயகார்த்திகேயன் தகவல்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் விஜயகார்த்திகேயன் கூறினார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பு வார்டு கலெக்டர் விஜயகார்த்திகேயன் தகவல்
Published on

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

கொரோனா வைரஸ் என்பது மனிதர்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடிய, ஒரு வகை வைரஸ் கிருமி ஆகும். சீனாவின் வூகான் நகரத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று முதலில் ஏற்பட்டுள்ளது. இது விலங்குகளிடம் இருந்து மனிதனுக்கு பரவி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

பொதுமக்கள் அனைவரும் இது குறித்து பயப்பட தேவையில்லை. மேலும், தொடர்ந்து காய்ச்சல், இருமல் மற்றும் சளி, உடல் சோர்வு மற்றும் மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கோ அல்லது அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

கை கழுவ வேண்டும்

நோய் அறிகுறிகள் கண்டநபர் இருமும் போதும், தும்மும் போதும் வெளிப்படும் நீர்த்திவலைகள் மூலம் நேரடியாக பரவுகிறது. இதுபோல் இருமல் மற்றும் தும்மல் மூலம் வெளிப்படும் கிருமிகளை உடைய நீர்த்தி வலைகள் படிந்துள்ள பொருட்களை தொடும்போது கைகள் மூலமாகவும் பரவுகிறது. இதனைத்தடுக்க தினமும் 10 முதல் 15 முறை சோப்பு போட்டு இரு கைகளையும் நன்கு தேய்த்து கழுவ வேண்டும்.

இருமும் போதும், தும்மும் போதும், வாய் மற்றும் மூக்கை கைகுட்டை கொண்டு மூடிகொள்ள வேண்டும். சிகிச்சை தரும் அனைத்து மருத்துவமனைகளிலும் கிருமி நாசினி கொண்டு சுத்தமாக துடைத்து பராமரிக்க வேண்டும். இதுபோல் சுற்றுலா மேற்கொள்ளும் பொதுமக்கள் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள, சீனாவிற்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்கலாம். இருமல், சளி, ஜலதோஷம் உள்ளவர்கள் பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு செல்வதையும், விழாக்களில் பங்கு பெறுவதையும் தவிர்க்க வேண்டும்.

பயப்பட வேண்டாம்

சீனாவிற்கு சென்று வந்தவர்கள் இருமல், சளி, காய்ச்சல், மூச்சுதிணறல் ஏற்பட்டால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று ஆலோசனை பெற வேண்டும். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து அரசு மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தமிழக அரசு சிறப்பு சிகிச்சை வார்டு ஏற்படுத்தியுள்ளது.

இதனால் திருப்பூர் மாவட்டத்தில் பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டாம். விழிப்புணர்வுடன் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். கிராமப்புறங்களில் உள்ள மக்களிடம் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். பொதுமக்கள் அதிகமாக கூடக்கூடிய இடங்களில் கைகழுவும் கிருமி நாசினி போதிய அளவு வைக்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும், மாணவ-மாணவிகளிடம் தினமும் 10 முதல் 15 முறை சோப்பு போட்டு இரு கைகளையும் நன்கு தேய்த்து கழுவுவதற்கு எடுத்துரைக்க வேண்டும்.

அவசர உதவி

கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். நோய் பாதிக்கப்பட்டுள்ள நபரின் அருகில் செல்வதையோ அல்லது அவரிடம் நேரடி தொடர்பு வைத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும். மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து அவசர உதவிக்கு 24 மணி நேரமும் 011-23978046 என்ற தொலை பேசி எண்ணையும் மற்றும் , 9444340496, 8754448477 ஆகிய செல்போன் எண்களையும் தொடர்புகொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், உதவி இயக்குனர் (கிராம ஊராட்சிகள்) பாலசுப்பிரமணியன், துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) ஜெகதீஷ்குமார், இணை இயக்குனர் (மருத்துவ பணிகள்) சாந்தி, துணை கலெக்டர் (பயிற்சி) விஷ்ணுவர்தினி உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com