உத்திரமேரூரில் விளைநிலத்தில் இயங்கி வரும் மதுக்கடைகளால் விவசாயிகள் பாதிப்பு அகற்றாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை

உத்திரமேரூரில் விளைநிலத்தில் இயங்கி வரும் மதுக்கடைகளால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே இவற்றை அகற்றாவிட்டால் போராட்டம் நடத்தப்போவதாக எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
Published on

உத்திரமேரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மல்லிகாபுரம் எல்லையில் 2 அரசு டாஸ்மாக் மதுக் கடைகள் பல ஏக்கர் பரப்பளவு கொண்ட விளைநிலங்களின் மத்தியில் செயல்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதி விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

மதுக்கடைகளுக்கு வரும் குடிமகன்கள் விளைநிலங்களில் அமர்ந்து மது அருந்துகிறார்கள். பயன்படுத்திய பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பாட்டில்களை வீசி சென்று விடுகிறார்கள். சிலர் மதுபாட்டில்களை உடைத்து எறிந்து விடுகிறார்கள். விளைநிலங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் கண்ணாடி துண்டுகள் நிறைந்து காணப்படுகிறது.

விவசாயிகள் தவிப்பு

இதனால் விவசாயிகள் விவசாயப்பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் இதுகுறித்து நிலத்தின் உரிமையாளர்கள் குடிமகன்களிடம் கேட்டால் மதுபோதையில் அவர்களை தாக்க வருவதாக கூறப்படுகிறது. மேலும் கண்ணாடி பாட்டில் துண்டுகள் விளைநிலங்களில் கிடப்பதால் நிலத்தில் இறங்கி வேலை செய்பவர்களின் உடலில் காயம் ஏற்படுத்தி விடுகிறது. எனவே இந்த டாஸ்மாக் கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த பயனும் இல்லை என்று அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதன்காரணமாக குறித்த நேரத்தில் விவசாயம் செய்ய முடியாமல், விவசாயத்திற்கு வைத்திருந்த பணத்தை மது பிரியர்கள் விட்டு செல்லும் கழிவுகளை அப்புறப்படுத்த செலவிட்டு வருவதாகவும், விவசாயம் செய்ய கடன் வாங்கும் சூழல் ஏற்பட்டு உள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

மேலும் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து வரும் பெண்களிடம், மது குடிக்கும் நபர்கள் தகாத வார்த்தைகளால் பேசி சில்மிஷம் செய்வதாகவும் கூறப்படுகிறது. இதுதவிர போதையில் வாகனங்களை வேகமாக ஓட்டிச்செல்வதால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன.

எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு இந்த 2 மதுக்கடைகளையும் அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த உள்ளதாக விவசாயிகளும், பொதுமக்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

விளைநிலங்களில் இருக்கும் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீதிமன்றம் அறிவுறுத்தியது. அப்போதே இந்த 2 மதுக்கடைகளையும் மாவட்ட நிர்வாகம் மூடும் என்று எதிர்பார்த்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எனவே இந்த மதுக்கடைகளால் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு நீதிமன்ற உத்தரவுபடி வாழ்வளிக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com