இன்று பாபர் மசூதி இடிப்பு தினம்: தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் குவிப்பு - பலத்த பாதுகாப்பு

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Published on

சென்னை,

இன்று(டிசம்பர் 6) பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதால், அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கும்படி மாநில அரசுகளுக்கு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்பேரில் தமிழகம் முழுவதும் போலீசை உஷார்படுத்தி அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், மத்திய-மாநில அரசு அலுவலங்கள், வழிபாட்டு தலங்கள், சினிமா தியேட்டர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும்படி டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். இதையொட்டி தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். சென்னை முழுவதும் முக்கியமான சாலைகளில் போலீசார் வாகன சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

ரோந்து பணியில் ஈடுபடவும், போலீசார் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். நீண்ட நேரமாக ஒரே இடத்தில் கிடக்கும் பொருட்களை தொட வேண்டாம் என்றும், தங்களது வீடுகளுக்கு அருகில் சந்தேக நபர்கள் நடமாட்டம் இருந்தால் அதுபற்றி அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கவேண்டும் என்று போலீசார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல், எழும்பூர் உள்ளிட்ட அனைத்து முக்கிய ரெயில் நிலையங்களிலும் 800 ரெயில்வே பாதுகாப்புப்படை மற்றும் ரெயில்வே போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர் என்று ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்வரன் நிருபர்களிடம் தெரிவித்தார். ரெயில் பயணிகளின் உடைமைகள் கடுமையாக சோதனை செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

ரெயில் நிலையங்களில் சந்தேக நபர்கள் யாரேனும் சுற்றித்திரிந்தால் உடனடியாக அவர்களை மடக்கி பிடிக்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். ரெயில் தண்டவாளங்களிலும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com