கழிவறை ஜன்னல் கண்ணாடியை உடைத்து போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பிஓடிய வாலிபருக்கு வலைவீச்சு சமூகவலைத்தளத்தில் வைரலாகும் காட்சியால் பரபரப்பு

விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் போலீஸ் நிலைய கழிவறை ஜன்னல் கண்ணாடியை உடைத்து தப்பிஓடினார். வாலிபர் தப்பிஓடும் காட்சி சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவிவருகிறது.
Published on

மும்பை,

மும்பை சிவாஜிநகர் போலீசார் திருட்டு வழக்கு தொடர்பாக முகமது இம்ரான் சபியுல்லாகான் என்ற இம்மு(வயது24) என்பவரை பிடித்து போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். நேற்று முன்தினம் காலை, விசாரணையின் போது, அவர் கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். அங்கு கழிவறையின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து போலீஸ்நிலையத்தின் முதல் மாடியில் இருந்து கீழே குதித்து தப்பிஓடினார்.

இந்தநிலையில் வாலிபர் போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பி செல்வதை பார்த்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். எனினும் போலீசார் வருவதற்குள் வாலிபர் அங்கிருந்து மாயமாகிவிட்டார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய வாலிபர் இம்முவை தேடிவருகின்றனர். இந்தநிலையில் வாலிபர் போலீஸ் நிலைய முதல் மாடியின் கழிவறை ஜன்னல் வழியாக வெளியே வந்து பக்கவாட்டு சுவரை பிடித்து கீழே குதித்து தப்பி சென்றதை பக்கத்து கட்டிடத்தில் வசிக்கும் சிலர் செல்போனில் வீடியோ எடுத்து இருந்தனர். அந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தநிலையில் சம்பவம் குறித்து துணை போலீஸ் கமிஷனர் விஸ்வபால் புஜ்பால் கூறுகையில், இம்முவுக்கு எதிராக 2 திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்காக அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்தோம். எனினும் போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவரை கைது செய்யவில்லை என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com