பெங்களூருவில் நடந்தது டி.கே.சிவக்குமாருடன், குலாம்நபி ஆசாத் திடீர் சந்திப்பு மாநில காங்கிரஸ் தலைவர் நியமனம் குறித்து ஆலோசித்தார்

பெங்களூருவில் முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமாரை, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் நேற்று திடீரென்று சந்தித்து பேசினார். அப்போது அவருடன் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் நியமனம் குறித்து குலாம்நபி ஆசாத் ஆலோசித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
Published on

பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி கவிழ்ந்து, பா.ஜனதா அரசு அமைந்துள்ளது. 15 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இதனால் மாநில தலைவர் பதவியை தினேஷ் குண்டுராவ் ராஜினாமா செய்தார். அதுபோல, எதிர்க்கட்சி தலைவர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்தார். ஆனால் எதிர்க்கட்சி தலைவர் பதவியில் சித்தராமையா தொடர்ந்து நீடிக்கும்படி காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தி உள்ளது.

அதே நேரத்தில் தினேஷ் குண்டுராவின் ராஜினாமா அங்கீகரிக்காமலும், புதிய தலைவரை நியமிக்காமலும் காங்கிரஸ் மேலிடம் தொடர்ந்து காலதாமதம் செய்து வருகிறது. மாநில தலைவராக முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமாரை நியமிக்க காங்கிரஸ் மேலிட தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். ஆனால் அவர் மீது வருமான வரித்துறையில் வழக்குகள் இருப்பதால், டி.கே.சிவக்குமாரை மாநில தலைவராக நியமிப்பதிலும், கர்நாடக மூத்த தலைவர்களின் எதிர்ப்பு காரணமாகவும் புதிய தலைவரை நியமிப்பதில் காலதாமதம் ஏற்பட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது,

இந்த நிலையில், பெங்களூரு சதாசிவநகரில் உள்ள முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமாரின் வீட்டுக்கு நேற்று காலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குலாம்நபி ஆசாத் திடீரென்று சென்றார். அவரை, டி.கே.சிவக்குமார் வரவேற்று அழைத்து சென்றார். பின்னர் 2 பேரும் வீட்டில் வைத்து அரை மணிநேரத்திற்கும் மேலாக பேசினார்கள்.

இந்த சந்திப்பின் போது கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் நியமனம் குறித்து டி.கே.சிவக்குமாரிடம் குலாம்நபி ஆசாத் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. மேலும் மாநில தலைவராக டி.கே.சிவக்குமாரை நியமிக்கும் விவகாரத்தில் கர்நாடக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது பற்றியும், அவாடம் குலாம்நபி ஆசாத் பேசியதாக தெரிகிறது.

சோனியா காந்தி உத்தரவின் பேரில் டி.கே.சிவக்குமாரை, அவர் சந்தித்து பேசியதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. பின்னர் டி.கே.சிவக்குமார் வீட்டில் இருந்து குலாம் நபி ஆசாத் புறப்பட்டு சென்றார். பெங்களூருவுக்கு வருகை தந்திருந்த குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மற்ற தலைவர்களை சந்தித்து பேசாமல் டி.கே.சிவக்குமாரை மட்டும் சந்தித்து பேசிவிட்டு சென்றிருப்பது காங்கிரஸ் கட்சியின் பிற தலைவர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com