இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை எதிர்பார்க்கும் கம்யூனிஸ்டு கட்சிகள்... திமுகவின் முடிவு என்ன...?

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது.
இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை எதிர்பார்க்கும் கம்யூனிஸ்டு கட்சிகள்... திமுகவின் முடிவு என்ன...?
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.

தமிழகத்தில் சட்டசபை தேர்தலில் 4 முனை போட்டி என்ற நிலை உருவாகி வருகிறது. அந்த வகையில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் என 4 முனை போட்டி உருவாகியுள்ளது.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்களிடம் விருப்பமனு வாங்குதல், நேர்காணல் நடத்துதல் உள்ளிட்ட பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன.

இதனிடையே, திமுக கூட்டணியில் காங்கிரஸ் கூடுதல் தொகுதிகள், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளதால் திமுக கூட்டணியில் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த கட்சியுடனும் பேச்சுவார்த்தை தொடங்கவில்லை. கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழுவும் இதுவரை அமைக்கப்படவில்லை.

திமுக கூட்டணியில் மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்பட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில் காங்கிரசை போன்றே திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பிற கட்சிகளும் ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதிகள் என பல்வேறு எதிர்பார்ப்புகளை முன்வைக்கத்தொடங்கியுள்ளன.

தமிழக அரசியலுக்கு புதிதாக வந்துள்ள விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தங்கள் கூட்டணியில் இணையும் கட்சிகளுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கு தருவோம் என்று வெளிப்படையாக அறிவித்துள்ளது. இதனால், திமுக, அதிமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகள் தங்கள் கூட்டணி பேரத்தை வலிமைப்படுத்த முயற்சித்து வருகின்றன.

அதேவேளை, பிரேமலதா தலைமையிலான தேமுதிக, ராமதாஸ் தலைமையிலான பாமக போன்ற கட்சிகள் எந்த கூட்டணிக்கு செல்வோம் என்ற அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த இரு கட்சிகளும் எந்த கூட்டணிக்கு செல்லும் என்பதில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய 2 கம்யூனிஸ்டு கட்சிகளும் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்கும் முனைப்பில் உள்ளன.

2021 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த 2 கம்யூனிஸ்டு கட்சிகளும் தலா 6 தொகுதிகளில் போட்டியிட்டு, தலா 2 தொகுதிகளில் வெற்றிபெற்றன.

வரும் சட்டசபை தேர்தலிலும் கம்யூனிஸ்டு கட்சிகள் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள நிலையில் இரு கட்சிகளும் இந்த முறை இரட்டை இலக்கத்தில் (10 அல்லது அதற்கு மேல்) தொகுதிகளை கேட்டுப்பெற முனைப்பு காட்டி வருகின்றன.

அதன்படி, திமுகவிடம் இந்த முறை இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்டுப்பெறுவோம் என்று இரு கம்யூனிஸ்டு கட்சிகளின் மாநில செயலாளர்களும் கூறி வருகின்றனர். ஏற்கனவே காங்கிரஸ் கட்சி கூடுதல் தொகுதிகளை கேட்போம் என கூறி வரும் நிலையில் தற்போது கம்யூனிஸ்டு கட்சிகளும் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்போம் என கூறுவதால் திமுக கூட்டணியில் களம் சூடுபிடித்துள்ளது.

அதேவேளை, 2021 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 18ல் வெற்றிபெற்றது. கூட்டணியில் இணைந்தால் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற தவெகவின் அழைப்பை ஏற்று திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் தவெக பக்கம் சாய்ந்தால் அது தமிழக அரசியலில் திருப்பு முனையாக அமையலாம்.

அவ்வாறான சூழ்நிலை ஏற்படும்பட்சத்தில் காங்கிரசுக்கு கடந்த முறை வழங்கிய 25 தொகுதிகள் தற்போது திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பிற கட்சிகளுக்கு பகிர்ந்து வழங்கப்படவும் வாய்ப்பு உள்ளது.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணியை உறுதி செய்வது, தொகுதி பங்கீடு போன்றவற்றை திமுக எவ்வாறு கையாளப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com