திமுக - காங்கிரஸ் கூட்டணியில் பிரச்சினை இல்லை ; கனிமொழி எம்.பி.

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது.
திமுக - காங்கிரஸ் கூட்டணியில் பிரச்சினை இல்லை ; கனிமொழி எம்.பி.
Published on

ராமநாதபுரம்,

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.

பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்பட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அதேவேளை, தேர்தலில் வெற்றிபெற்றால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரவேண்டுமென திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் சில நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றன. இதற்கு திமுக தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால், திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், திமுக துணைப்பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி இன்று ராமேசுவரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த கனிமொழி கூறுகையில்,

தேர்தலின்போது அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் இதுவரை 400க்கும் மேலான வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம்.

சில வாக்குறுதிகளில் மத்திய அரசு எங்களுக்கு எதிராக செயல்பட்டுக்கொண்டிருப்பதால் அந்த வாக்குறுதிகளை செயல்படுத்த முடியாத சூழ்நிலை நிலவுகிறது. சில வாக்குறுதிகள் பரிசீலனையில் உள்ளன. பெண்கள், மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் செயல்படுத்தியுள்ளார்.

திமுக - காங்கிரஸ் கூட்டணி விவகாரத்தில் தனிநபர்கள் பேச்சுகளுக்கெல்லாம் கட்சி பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது.

திமுக தலைமைக்கும், காங்கிரஸ் தலைமைக்கும் இணக்கமான நல்லுறவு இருக்கிறது. திமுக - காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை.

சட்டசபை தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி இணைந்து செயல்படும். கூட்டணி பேச்சுவார்த்தைக்குழு விரைவில் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com