தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழுவை உடனே அமைக்க வேண்டும்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது.
தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழுவை உடனே அமைக்க வேண்டும்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
Published on

டெல்லி,

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.

பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்பட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அதேவேளை, தேர்தலில் வெற்றிபெற்றால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரவேண்டுமென திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் சில நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றன. இதற்கு திமுக தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதனால், திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், தொகுதி பங்கீடு, கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை குழுவை திமுக இதுவரை அமைக்கவில்லை. இது திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் 70 பேர் இன்று டெல்லி சென்றனர். செல்வப்பெருந்தகை தலைமையிலான தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே , ராகுல் காந்தி உள்பட மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனையில் தமிழக சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி, தொகுதி பங்கீடு, கட்சியை வலுப்படுத்துதல், தேர்தல் பணிகள் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

இதனை தொடர்ந்து டெல்லியில் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,

காங்கிரஸ் கட்சியில் குழப்பம் இல்லை. தேர்தல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழுவை திமுக இதுவரை அமைக்கவில்லை. பேச்சுவார்த்தை குழுவை திமுக இதுவரை அமைக்காததால் காங்கிரஸ் வருத்தமடைந்துள்ளது.

கடைசி நேரத்தில் தேர்தல் களத்திற்கு சென்று வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து அவர்களை களத்திற்கு அனுப்புவதில் பீகார், ராஜஸ்தான், மராட்டிய, ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் கடைசி கட்டத்தில் சிக்கலை உருவாக்கின.

இந்த அனுபவத்தை வைத்து முன்னதாகவே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு யாருக்கு எந்த தொகுதி ஒதுக்கப்படுகிறதோ 234 தொகுதிகளிலும் பணியாற்ற வேண்டும். அதில் எங்களுக்கு சில சிரமங்கள் உள்ளன.

திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு எங்கள் கோரிக்கை என்னவென்றால் உடனடியாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழுவை நியமிக்கவேண்டும். ஏனென்றால் தேர்தலில் அடுத்த கட்டத்திற்கு களத்திற்கு சென்றுவிட வேண்டும்.

கடைசி நேரத்தில் பேச்சுவார்த்தை தொடங்கி அனைத்து நடைமுறைகளையும் முன்கூட்டியே முடித்துவிட வேண்டும் என்பதுதான் தலைமையின் கருத்து. திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழுவை அமைக்காதது காங்கிரஸ் தலைமைக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் அனைத்தையும் வெளியே கூற முடியாது.

தொகுதி பங்கீடு தொடர்பாக இதுவரை பேச்சுவார்த்தையே தொடங்கவில்லை. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நாளையோ, நாளை மறுதினமோ சந்தித்து காங்கிரஸ் தலைமை வலியுறுத்தியதை கூறுவோம். நாளையே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திப்போம்.

தமிழகத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்பட காங்கிரஸ் தலைவர்கள் பிரசாரம் மேற்கொள்ள வர திட்டங்கள் அனைத்து தயார் நிலையில் உள்ளன. காங்கிரஸ் தயாராக உள்ளது.

பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டு, தொகுதி பங்கீடு அனைத்தும் உறுதியான பின்னர் தான் கார்கே, ராகுல் உள்பட காங்கிரஸ் தலைவர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்து வர முடியும். தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழு அமைக்கப்படாததால் அனைத்து நடைமுறைகளும் தடைபட்டுளன.

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழுவை திமுக உடனடியாக அமைப்பது அனைவரும் நல்லது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நாளை சந்தித்து காங்கிரஸ் தலைமை என்ன கூறியதோ? அதை அவரிடம் கூறுவேன்

என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com