ஈரோடு வ.உ.சி. பூங்காவிற்கு காய்கறி சந்தையை மாற்றும் பணி தீவிரம்

ஈரோடு வ.உ.சி. பூங்காவிற்கு காய்கறி சந்தையை மாற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதனால் அங்கு சரக்கு வாகனங்களை நிறுத்தக்கூடாது என்று மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
ஈரோடு வ.உ.சி. பூங்காவிற்கு காய்கறி சந்தையை மாற்றும் பணி தீவிரம்
Published on

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஈரோடு ஆர்.கே.வி. ரோட்டில் செயல்பட்டு வந்த நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட், தற்காலிகமாக பஸ் நிலைய வளாகத்திற்கு மாற்றப்பட்டது. இந்த தற்காலிக காய்கறி சந்தையில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகிறார்கள். இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை மொத்த வியாபாரமும், காலை 6 மணி முதல் 9 மணி வரை சில்லரை வியாபாரமும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஊரடங்கில் சில தளர்வுகளை தமிழக அரசு நேற்று அறிவித்து உள்ளது. அதன்படி பஸ் போக்குவரத்தை தொடங்க மாநிலத்தில் 8 மண்டலங்கள் பிரிக்கப்பட்டு உள்ளன. இந்த மண்டலங்களில் இன்று (திங்கட்கிழமை) முதல் 50 சதவீத பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

இதனால் ஈரோடு பஸ் நிலையத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. கோவை, சேலம், பழனி மற்றும் வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் நிற்கும் இடம் பஸ் நிலையமாகவும், டவுன் பஸ்கள், மினி பஸ்கள் மற்றும் பவானி, மேட்டூருக்கு செல்லும் பஸ்கள் நிற்கும் இடங்கள் தற்காலிக காய்கறி சந்தையாகவும் மாற்றப்பட்டு உள்ளன.

இதற்கிடையில், ஈரோடு பஸ் நிலையத்தில் செயல்பட்டு வரும் தற்காலிக காய்கறி சந்தை முழுமையாக வ.உ.சி. பூங்காவிற்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது. இதற்காக வ.உ.சி. பூங்காவில் பொக்லைன் எந்திரம் மூலம் மண் கொட்டும் பணி, செட் அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகள் இன்னும் 3 அல்லது 4 நாட்களுக்குள் முடிவடைந்துவிடும். அதன் பின்னர் ஈரோடு பஸ் நிலையத்தில் செயல்படும் தற்காலிக காய்கறி சந்தை முழுமையாக வ.உ.சி. பூங்காவிற்கு மாற்றப்படும்.

இதன் காரணமாக ஈரோடு வ.உ.சி. பூங்கா அருகே வீரபத்திர வீதியில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த சரக்கு வேன் நிறுத்தும் இடத்தினை காலி செய்யுமாறு மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். இதனால் அங்கு சரக்கு வேன்களை நிறுத்தி வந்த 50-க்கும் மேற்பட்ட டிரைவர்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அதனால் அவர்கள் தங்களுக்கு மாநகராட்சி சார்பில் மாற்று இடம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com