திருச்சி,
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் 2-ம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பாளர் ஆகிய பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வில் வெற்றி பெற்ற திருச்சி மாநகரம் மற்றும் திருச்சி சரகத்துக்குட்பட்ட அரியலூர், பெரம்பலூர், கரூர் மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் 2,473 ஆண்கள், 1,251 பெண்கள் என மொத்தம் 3,724 பேருக்கு உடல் தகுதி தேர்வு 5 நாட்கள் நடப்பதாக இருந்தது.
எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல் தகுதித்தேர்வு திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடந்து வந்தது. 2-ம் நிலை ஆண் காவலர் பணிக்கான உடல் தகுதித்தேர்வு 3 நாட்கள் நடந்தது. அதில் ஆண்கள் 1,705 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
பெண் காவலர் பணிக்கான உடல் தகுதித்தேர்வு கடந்த 9-ந் தேதி மற்றும் 11-ந் தேதிகளில் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வேளையில் அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட இருந்ததால், அத்தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டன. ஒத்தி வைக்கப்பட்ட பெண் காவலர் பணிக்கான உடல் தகுதித்தேர்வு மீண்டும் நேற்று தொடங்கியது.
நேற்றைய தினம் 700 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 634 பேர் மட்டுமே உடல் தகுதித்தேர்வில் கலந்து கொண்டனர்.
முதலில் அவர்களின் கல்விச்சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. பின்னர் அவர்களின் உயரம் அளக்கப்பட்டு, ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது. உடல் தகுதித்தேர்வில் பங்கேற்க வந்த ஒரு பெண், தனது கைக்குழந்தையுடன் வந்திருந்தார். மேலும் 5 கர்ப்பிணிகளும் உடல் தகுதித்தேர்வுக்கு வந்திருந்தனர். அவர்களை அங்கிருந்த போலீஸ் அதிகாரிகள் உடல் நலன் கருதி அனுமதிக்காமல் திரும்ப அனுப்பி விட்டனர். இதனால், அப்பெண்கள் சிறிது நேரம் கண்கலங்கியபடி நின்றனர். ஒரு பெண்ணுக்கு அளவீடு மூலம் உயரம் கணக்கீடும்போது உயரம் குறைவாக இருந்தார். எனவே, அவர் நிராகரிக்கப்பட்டார். அந்த பெண்ணை மீண்டும் எலக்ட்ரானிக் முறையில் அளவிடும்போது உயரம் நிர்ணயிக்கப்பட்ட அளவு இருந்ததால் தேர்வு செய்யப்பட்டார்.உடல் தகுதித்தேர்வை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், திருச்சி சரக டி.ஐ.ஜி.பாலகிருஷ்ணன், பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்தீபன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இன்று(செவ்வாய்க்கிழமை) 2-வது நாளாக உடல் தகுதித்தேர்வுக்கு 551 பெண்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே உடல் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற ஆண்களுக்கு நாளை (புதன்கிழமை), நாளை மறுநாள்(வியாழக்கிழமை) என 2 நாட்கள் உடல் திறன் தேர்வும் நடத்தப்படுகிறது. நீளம் தாண்டுதல், கயிறு ஏறுதல், ஓட்டப்பந்தயம் உள்ளிட்டவை நடத்தப்படுகிறது. 22-ந் தேதி பெண்களுக்கான உடல் திறன் தேர்வும் நடைபெறுகிறது.