திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ மாநிலங்களவை தி.மு.க. வேட்பாளர்கள் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

நாடாளுமன்ற மாநிலங்களவை தி.மு.க. வேட்பாளர்களாக திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோரை மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
Published on

சென்னை,

நாடாளுமன்ற மாநிலங்களவையில் தற்போது எம்.பி.க்களாக இருக்கும் 55 பேரின் பதவி காலம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 2-ந் தேதியுடன் முடிவடைகிறது.

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக இருக்கும் திருச்சி சிவா (தி.மு.க.), டி.கே.ரங்கராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), சசிகலா புஷ்பா (அ.தி.மு.க.), விஜிலா சத்யானந்த் (அ.தி.மு.க.), மேட்டுப் பாளையம் செல்வராஜ் (அ.தி.மு.க.), முத்துக்கருப்பன் (அ.தி.மு.க.) ஆகிய 6 பேரின் பதவி காலமும் நிறைவடைகிறது.

இந்த காலி இடங்களுக்கு புதிய எம்.பி.க்களை தேர்வு செய்வதற்காக வருகிற 26-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் 6-ந் தேதி தொடங்கும் என்றும், மனு தாக்கல் செய்ய 13-ந் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழக சட்டசபையில் தற்போது அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வுக்கு இருந்து வரும் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அடிப்படையில், இரு கட்சிகளும் தலா 3 உறுப்பினர் களை தேர்வு செய்து மாநிலங்களவைக்கு அனுப்ப முடியும்.

இதைத்தொடர்ந்து தி.மு.க.வில் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பெற கடும் போட்டி நிலவியது. தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரசும் தங்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பெற முயற்சித்தது.

இதேபோல், அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள தே.மு.தி.க.வும் தங்களுக்கு ஒரு இடம் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளது.

இந்த நிலையில் தி.மு.க. சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகிற 26-ந் தேதி நடைபெற இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தலுக்கான தி.மு.க. வேட்பாளர்களாக திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று கூறி உள்ளார்.

திருச்சி சிவா, ஏற்கனவே 4 முறை மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளார். தலைசிறந்த பேச்சாளர். சிறந்த எழுத்தாளரும், இலக்கியவாதியும் ஆவார். மாணவ பருவத்திலேயே தி.மு.க. மாணவர் அணியில் சேர்ந்து கட்சி தொண்டாற்றியவர். 1976-ம் ஆண்டு நெருக் கடி நிலையின் போது மிசாவில் கைது செய்யப்பட்டார். தற்போது, தி.மு.க.வில் கொள்கை பரப்பு செயலாளராக உள்ளார்.

அந்தியூர் செல்வராஜ், தி.மு.க. ஆட்சியின் போது அமைச்சராக பதவி வகித்தார். இவர், தி.மு.க.வில் ஆதிதிராவிடர் நலக்குழு செயலாளராக இருந்து வருகிறார்.

என்.ஆர்.இளங்கோ, சென்னை ஐகோர்ட்டில் மூத்த வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவரது சொந்த ஊர் வேலூர் மாவட்டம் சோழிங்கர் ஆகும். தி.மு.க. தலைமைக்கழக சட்ட ஆலோசகராக இருந்து வருகிறார். இவருக்கு வயது 53.

கடந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து 6 மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்ற போது தி.மு.க. கூட்டணி சார்பில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் வேட்புமனு தாக்கல் செய்தார்.

தேசத்துரோக வழக்கின் தீர்ப்பு காரணமாக வைகோவின் மனு நிராகரிக்கப்படலாம் என்று கருதப்பட்டதால், அந்த சமயத்தில் என்.ஆர்.இளங்கோவும் கூடுதலாக மனு தாக்கல் செய்திருந்தார். தேர்தல் ஆணையம் வைகோ மனுவை ஏற்றுக்கொண்டதால் என்.ஆர்.இளங்கோ தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com