

தூத்துக்குடி,
தூத்துக்குடி மேலூர் ஆதிபராசக்தி சக்திபீடத்தில் ஆடிப்பூர விழா கடந்த 9-ந் தேதி கலசவிளக்கு வேள்வி பூஜையுடன் தொடங்கியது. இதில் 1,008 தமிழ் மந்திரங்கள் கூறி அர்ச்சனை செய்யப்பட்டது. பூஜையை சக்திபீட தலைவர் முத்துக்குமார் தீபம் ஏற்றி தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, மழை வளம் வேண்டி 108 செவ்வாடை பக்தர்கள் அக்னிசட்டி ஏந்தி சக்திபீடத்தை சுற்றி வலம் வந்து வழிபட்டனர்.
ஆடிப்பூர விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கஞ்சி கலய ஊர்வலம் தூத்துக்குடி சிவன் கோவில் முன்பு இருந்து புறப்பட்டது. ஊர்வலத்தை முன்னாள் வாரிய தலைவர் அமிர்தகணேசன் தொடங்கி வைத்தார். இயற்கை சீற்றம் தணியவும், மழைவளம் வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும், மக்கள் வளமுடன் வாழ வேண்டியும் 1,008 பெண்கள் கஞ்சி கலயத்தை தலையில் சுமந்தபடி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று சக்திபீடத்தில் உள்ள அன்னைக்கு கஞ்சிவார்த்தனர். தொடர்ந்து 36 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
விழாவில் சக்திபீட நிர்வாகிகள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.