பாகிஸ்தானில் இந்திய தூதரக அதிகாரிகள் 2 பேர் திடீர் கைது

பாகிஸ்தானில் இந்திய தூதரக அதிகாரிகள் இருவர் நேற்று திடீரென்று கைது செய்யப்பட்டனர். இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்ததால், பாகிஸ்தான் பின்னர் அவர்களை விடுதலை செய்தது.
Published on

புதுடெல்லி,

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்து, அந்த மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிரான மோதல் போக்கை கடந்த சில மாதங்களாக தீவிரப்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. நிறுவனத்துக்காக இந்தியாவில் உளவு பார்த்த டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் அபித் உசேன், முகமது தாகிர் ஆகியோர் இரு வாரங்களுக்கு முன் கைது செய்யப்பட்டனர். மறுநாள் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

அவர்கள், இந்திய ராணுவத்தின் இடம் பெயர்தல் தொடர்பான ரகசிய ஆவணங்களை பணம் கொடுத்து இந்தியர் ஒருவரிடம் இருந்து பெற்றது கண்டுபிடிக்கப்பட்டதால் அவர்களை மத்திய அரசு வெளியேற்றியது.

இதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்தது. அத்துடன் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தொல்லை கொடுத்து வந்தது. இந்திய தூதரக அதிகாரி கவுரவ் அலுவாலியாவின் காரை பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகள் இரு முறை பின்தொடர்ந்து சென்றனர்.

இது குறித்து அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் இந்தியா தனது கடும் எதிர்ப்பை தெரிவித்தது.

இந்த சூழ்நிலையில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றி வரும் அதிகாரிகள் 2 பேர் நேற்று திடீரென்று மாயம் ஆனார்கள்.

அந்த இரு அதிகாரிகளும் அலுவலகத்தில் இருந்து நேற்று காலை வாகனத்தில் புறப்பட்டு சென்றனர். ஆனால் அவர்கள் போய்ச் சேரவேண்டிய இடத்துக்கு போய்ச் சேரவில்லை. அவர்கள் என்ன ஆனார்கள்? அவர்கள் கதி என்ன? அவர்களை யாராவது கடத்திச் சென்றார்களா? என்பது பற்றி எதுவும் தெரியாமல் இருந்து வந்தது.

2 அதிகாரிகள் மாயமானது குறித்து இந்திய தூதரக அதிகாரிகள், இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர். மேலும் இந்திய அரசுக்கும் முதல் கட்ட அறிக்கையை அனுப்பி வைத்தனர்.

விபத்தை ஏற்படுத்தியதாக கைது

இந்த நிலையில், இந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டது.

இந்திய தூதரக அதிகாரிகள் இருவரும் சென்ற சொகுசு கார் காலை 8 மணி அளவில் எம்பசி சாலையில் சென்ற போது அந்த வழியாக வந்த நடந்த வந்த ஒருவர் மீது மோதியதாகவும், அப்போது அங்கு கூடிய ஏராளமான பேர், காரை தடுத்து நிறுத்தி தப்பி ஓட முயன்ற 2 இந்திய தூதரக அதிகாரிகளையும் பிடித்து இஸ்லாமாபாத் போலீசாரிடம் ஒப்படைத்ததாகவும் பாகிஸ்தானின் ஜியோ நியூஸ் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. கார் மோதியதில் அந்த நபர் படுகாயம் அடைந்ததாகவும், அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அந்த தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பியது.

இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்த போதுதான் அவர்கள் இந்திய தூதரக அதிகாரிகள் என தெரிய வந்தது என்ற தகவலையும் அந்த தொலைக்காட்சி வெளியிட்டது.

இதைத்தொடர்ந்து, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரியை வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் அழைத்து, இஸ்லாமாபாத்தில் இந்திய தூதரக அதிகாரிகள் கைது செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். அத்துடன் கைது செய்யப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்தவோ, துன்புறுத்தவோ கூடாது என்றும், அவர்களுடைய பாதுகாப்புக்கு பாகிஸ்தான் அரசுதான் பொறுப்பு என்றும் கண்டிப்புடன் கூறினார்கள்.

மேலும் 2 அதிகாரிகளையும் அவர்கள் சென்ற அலுவலக காருடன் இந்திய தூதரகத்துக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்று இந்திய தரப்பில் கேட்டுக் கொண்டனர்.

இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து, இந்திய தூதரக அதிகாரிகள் இருவரையும் பாகிஸ்தான் அதிகாரிகள் நேற்று மாலை விடுதலை செய்தனர்.

இதைத்தொடர்ந்து அதிகாரிகள் இருவரும் இந்திய தூதரகத்துக்கு வந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com