மும்பை,
மும்பை பைகுல்லாவில் மாநகராட்சி உயிரியல் பூங்கா உள்ளது. பைகுல்லா பூங்கா விரிவாக்க பணிகள் 3 கட்டங்களாக நடந்து வருகிறது. ரூ.80 கோடி செலவில் நடந்த முதல் கட்ட பணிகளின் போது, பென்குயின் பறவைகள் தென்கொரியாவில் இருந்து கொண்டு வரப் பட்டு பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. தற்போது 2 கட்ட பணிகள் ரூ.120 கோடி செலவில் நடந்து வருகிறது.
இதில் வனவிலங்குகளுக்கான வாழ்விடங்கள் அமைத்தல், தடுப்பு சுவர் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக பைகுல்லா பூங்காவுக்கு 2 வயது ஆண், 3 வயது பெண் சிறுத்தைப்புலிகள் வாங்கப்பட்டுள்ளன. இந்த சிறுத்தைப்புலிகள் மங்களூரு உயிரியல் பூங்காவில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன.
இதுகுறித்து பூங்கா அதிகாரி ஒருவர் கூறுகையில், ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்துக்கு மாற்றப்பட்டதால் அந்த சிறுத்தைப்புலிகள் சரியாக சாப்பிடாமல் உள்ளன. சில நாட்கள் அந்த சிறுத்தைப்புலிகளை கண்காணிப்பில் வைத்து, பின்னர் அவை சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு விடப்படும் என்றார்.
இதுபற்றி மற்றொரு அதிகாரி கூறுகையில், பைகுல்லா ராணி பூங்காவுக்கு சிங்கம், புலி, அரியவகை பறவைகள், கரடி, நரி, ஓநாய் போன்றவையும் கொண்டு வரப்பட உள்ளன. அந்த விலங்குகளுக்கான வாழ்விடங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது, என்றார்.
பைகுல்லா பூங்காவில் இதுவரை சிறுத்தைப்புலிகள் இல்லாமல் இருந்தது. தற்போது அதன் வரவு மூலம் அவை விரைவில் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்து படைக்க உள்ளன.