பேரையூர்,
தமிழக அரசின் சாதனைகளை விளக்கி ஜெயலலிதா பேரவை சார்பில் நடந்த தொடர் ஜோதி நடைபயணம் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் டி.கல்லுப்பட்டி வந்தது. அங்கு அ.தி.மு.க.வினர் திரண்டு வந்து வரவேற்றனர். நடைபயணத்தில் வந்தவர்கள் அரசின் சாதனை துண்டுபிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.
அப்போது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு பின்னர் யாரால் நிறுத்தப்பட்டது என்று மக்களுக்கு தெரியும். பாட்டெழுதி பெயர் வாங்குபவர்களும் இருக்கிறார்கள். குற்றம் கண்டுபிடித்து பெயர் வாங்குபவர்களும் உள்ளனர். ஆனால் ஸ்டாலினை பார்த்தால் பாட்டெழுதி பெயர் வாங்குபவராக தெரியவில்லை. எழுதிய பாட்டில் குறை கண்டுபிடித்து அதன் மூலமாக பெயர் வாங்கலாம் என்று நினைக்கிறார்.
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணை கட்டுவது பேசிவிட்டு போகக்கூடிய விஷயம் அல்ல. இருமாநில உறவுகள் சம்பந்தப்பட்டது. முறையான அணுகு முறையை நாம் கையாள வேண்டும். தமிழகத்தின் உரிமையை விட்டு தரமாட்டோம் என்று முதல்-அமைச்சர் கூறியுள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது என்ன செய்தார்கள். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்யக்கூடிய விஷயம் அல்ல.
உள்ளாட்சி தேர்தலில் கட்சி அனுமதித்தால் போட்டியிடுவேன் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். இது தெரிந்த விஷயம்தான். எழுதி வைக்கப்பட்ட நாடகம் அரங்கேற்றப்படுகிறது. தி.மு.க.வில் இருப்பது மன்னராட்சி. அ.தி.மு.க.வில் இருப்பது ஜனநாயக ஆட்சி. நம்மிடம் இருப்பது ஜனநாயகம். மக்களால் மகுடம் சூட்டப்படுவது.
தி.மு.க.வில் அவர்களாகவே மகுடம் சூட்டிக்கொள்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் குறைதீர்க்கும் முகாம் மூலம் மக்களிடம் நேரில் சென்று அவர்கள் குறைகளை கேட்டு அதற்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் டி.கல்லுப்பட்டி பேரூராட்சி சார்பாக அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைச்சர் மரக்கன்று நடுவதை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அ.தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் அய்யப்பன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் வக்கீல் திருப்பதி, ஒன்றிய செயலாளர் ராமசாமி, டி.கல்லுப்பட்டி பேரூராட்சி முன்னாள் தலைவர் மாணிக்கம், ஒன்றிய அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் ராமகிருஷ்ணன், டி.கல்லுப்பட்டி நகர் செயலாளர் பாலசுப்பிரமணியன், செயல் அலுவலர் சின்னசாமி பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடைபயணம் கொல்லவீரன்பட்டி, வில்லூர் வழியாக சென்றது.
மாவட்டத்தில் தொடர்ந்து 5-வது நாளாக வருவாய்த் துறையோடு இணைந்து மாவட்ட நிர்வாகம் மூலம் அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. டி.கல்லுப்பட்டி தாலுகாவில் கலெக்டர் வினய் தலைமையில் நடந்த விழாவில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் தாசில்தார் மூர்த்தி, அ.தி.மு.க. புறநகர் மாவட்ட துணை செயலாளர் அய்யப்பன், கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், நகர செயலாளர் விஜயன், திருமங்கலம் ஒன்றிய செயலாளர் அன்பழகன், நிர்வாகிகள் ஆண்டிச்சாமி, ஜஹாங்கீர், சதீஸ்சண்முகம், சாமிநாதன், கபிகாசிமாயன், சுகுமார், செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.