தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் நெல் சாகுபடியை மேம்படுத்திட ரூ.26 லட்சம் ஒதுக்கீடு இணை இயக்குனர் சேகர் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் நெல் சாகுபடியை மேம்படுத்திட ரூ.26 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக நாமக்கல் வேளாண்மை இணை இயக்குனர் சேகர் தெரிவித்து உள்ளார்.
Published on

நாமக்கல்,

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் சேந்தமங்கலம், எருமப்பட்டி, மோகனூர், பள்ளிபாளையம், வெண்ணந்தூர், நாமகிரிப்பேட்டை, மல்லசமுத்திரம், பரமத்தி, கபிலர்மலை ஆகிய வட்டாரங்களில் சம்பா பருவத்தில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

நடப்பு ஆண்டில் வேளாண்மைத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட உள்ள தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சான்று விதை உற்பத்தி மானியமாக விதை பண்ணை அமைத்து கொள்முதல் செய்யும் விவசாயிகளுக்கு 10 ஆண்டுகளுக்கு உட்பட்ட ரகங்களுக்ககு கிலோ ஒன்றுக்கு ரூ.8-ம், அதற்கு மேற்பட்ட ரகங்களுக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.6-ம் வழங்கப்பட உள்ளது. மேலும் நெல் வினியோக மானியமாக 10 ஆண்டுகளுக்கு உட்பட்ட ரகங்களுக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.20-ம், அதற்கு மேற்பட்ட ரகங்களுக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.10-ம் வழங்கப்பட உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் திருந்திய நெல் சாகுபடி முறையில் எந்திர நடவு செய்யும் விவசாயிகளுக்கு 2 ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் மானியமும், உழவர் ஆர்வலர் குழு மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழு ஆகியவற்றின் மூலம் நெல் எந்திர நடவு செய்யும் விவசாயிகளுக்கு 2 ஏக்கருக்கு ரூ.6 ஆயிரம் மானியமும், களை எடுக்கும் கருவி ஒன்றுக்கு சிறு, குறு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு ரூ.1,200-ம், இதர விவசாயிகளுக்கு ஆயிரம் ரூபாயும், தார்பாலின் ஒன்றுக்கு ரூ.1,300-ம் மானியமாக வழங்கப்பட உள்ளது.

மேலும் நெல் நுண்சத்து, களைக்கொல்லி, மற்றும் உயிர் உரங்கள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு நாமக்கல் மாவட்டத்திற்கு தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் நெல் சாகுபடியை மேம்படுத்திட ரூ.26 லட்சத்து 2 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இந்த திட்டம் பற்றிய விவரங்களை அறிய நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த விவசாயிகள் அந்தந்த பகுதி வேளாண்மை துறை களப் பணியாளர்கள் மற்றும் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்களை அணுகி பயன் பெறலாம்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com