தொழிற்சங்கங்கள் பொது வேலைநிறுத்தம்: வங்கி பணிகள் கடும் பாதிப்பு; ரூ.100 கோடி வர்த்தகம் முடங்கியது

தொழிற்சங்கங்கள் நடத்திய பொது வேலைநிறுத்தம் காரணமாக நெல்லை மாவட்டத்தில் வங்கி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ரூ.100 கோடி வர்த்தகம் முடங்கியது. ஆனால், பஸ்-ஆட்டோக்கள் வழங்கம்போல் ஓடியதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கவில்லை.
Published on

நெல்லை,

அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று அகில இந்திய பொது வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக்கூடாது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் இந்த போராட்டம் நடைபெற்றது. நெல்லை மாவட்டத்திலும் பொது வேலைநிறுத்த போராட்டத்தில் பல்வேறு சங்க ஊழியர்கள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

குறிப்பாக பெரும்பாலான வங்கி ஊழியர் சங்கங்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி நெல்லையில் ஒருசில வங்கிகள் தவிர பெரும்பாலான வங்கிகள் மூடிக்கிடந்தன. ஒருசில வங்கிகளுக்கு அதிகாரிகள் வந்திருந்த போதிலும், ஊழியர்கள் வராததால் வங்கிகள் செயல்படாமல் வெறிச்சோடிக்கிடந்தன. இதன் காரணமாக நெல்லை மாவட்டத்தில் பணப்பரிவர்த்தனை பாதிக்கப்பட்டதால் சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான வர்த்தகம் முடங்கியதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.

இதேபோல் அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கத்தினரும் வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கினர். அவர்கள் அலுவலக பணிகளை புறக்கணித்ததால் பாளையங்கோட்டையில் உள்ள எல்.ஐ.சி. கோட்ட அலுவலகம் மற்றும் கிளை அலுவலகங்கள் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி கிடந்தன. எல்.ஐ.சி. பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள், பாளையங்கோட்டை கிளை அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை கோட்ட தலைவர் மதுபால் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் முத்துக்குமாரசாமி, இணை செயலாளர்கள் பொன்னையா, பட்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும், தபால் ஊழியர்களும் பொது வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர். இதனால் பாளையங்கோட்டை தலைமை தபால் நிலையம் உள்ளிட்ட தபால் நிலையங்களில் தபால் பட்டுவாடா, மணிஆர்டர் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டன.

இந்த வேலை நிறுத்ததுக்கு போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆதரவு தெரிவித்து இருந்தன. ஆனால் பஸ், ஆட்டோக்கள் வழக்கம் போல் ஓடின. நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு புறநகர் பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. பொருட்காட்சி திடல் பஸ் நிலையத்தில் இருந்து டவுன் பஸ்களும் வழக்கம்போல் இயக்கப்பட்டன. அரசு, தனியார் பஸ்கள் வழக்கம்போல் ஓடின.

இதேபோல் காலை மற்றும் மாலையில் பள்ளிக்குழந்தைகளை ஆட்டோ டிரைவர்கள் வழக்கம் போல் அழைத்துச்சென்று, வீட்டுகளில் விட்டுச்சென்றனர். ஆட்டோ, கார், வேன் ஸ்டாண்டுகளில் இருந்து வாகனங்கள் இயக்கப்பட்டன. பள்ளிகள் வழக்கம்போல் செயல்பட்டன. ஒருசில ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் மட்டும் பணிக்கு வராமல் இருந்தனர்.

வேலைநிறுத்தம் காரணமாக நெல்லை மாநகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. முக்கிய சந்திப்புகள், மக்கள் கூடும் இடங்கள், பஸ் நிலையங்களில் போலீசார் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த வேலைநிறுத்தத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com